தமிழகம்

‘திமுகவுக்கு பலமான போட்டி இல்லையா?’ - ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “திமுகவுக்கு எதிராக பலமான போட்டியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால், அதை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எங்களது விருப்பம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபம் ஏற்ற முடியவில்லை. இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

          

இதன் காரணமாகவும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியும், வீடுகள் முன்பும் பொது இடங்களிலும் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொகுதிப் பங்கீடு மின்னல் வேகமா, முயல் வேகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தை சினிமா படத்தில் சொன்னதுபோல ‘வாமா மின்னல்...’ என வந்த வேகத்தில் போய்விடும். திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் பேசும் கருத்துகள் மறைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரதமரை கொலை செய்வேன் என சொன்னவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. திமுக பாரபட்சமான ஆட்சியை நடத்தி வருகிறது” என்றார்.

பாஜகவுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவேன் என டிடிவி தினகரன் சொல்லி வந்ததற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “பாஜக, அதிமுக இரண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளன. எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான பலமான போட்டி இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால், அதை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT