சென்னை: “உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்” என்று தவெக எம்எல்ஏ.க்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தவெக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த மே 13-ம் தேதி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பின் மூலம் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை நிரூபித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் ஆட்சிக்குச் சவாலாக இருந்து வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்களின் நடவடிக்கையால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர், மனு அளிக்க வந்த நபரை தாக்கியது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரங்களில் தமிழக அரசுக்கு எதிராகவும், தவெக தலைமைக்கு எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தவெக கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் மாலை 4.10 மணிக்கு நடைபெற்றது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், எம்எல்ஏக்களின் உதவியாளர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விடுதியின் வாயிற்கதவு அருகே இறக்கிவிடப்பட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாகப் பெண் எம்எல்ஏக்களை அழைத்த முதல்வர் விஜய், தொகுதி மேம்பட கடந்த 6 மாதங்களில் செய்த நடவடிக்கைகள் என்ன, மேற்கொள்ளப்படும் பணிகள் என்னென்ன போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், தொகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்த அறிக்கையை எம்எல்ஏக்கள் சமர்ப்பித்தனர். அதன்பின் அவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டாவது கட்டமாக மற்ற எம்எல்ஏக்களில் ஒரு பகுதியினரை தனித்தனியாக அழைத்து முதல்வர் பேசியதாகவும் அப்போது வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சந்திப்புகளின் போது எம்எல்ஏக்கள் பலர் தொகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர். மேலும், கிடப்பில் உள்ள பணிகளைக் கூட முடிக்க முடியாமல் சுணக்கம் ஏற்படுவதாக எம்எல்ஏக்கள் கூற, அவற்றை எல்லாம் முதல்வர் குறித்து வைத்துக் கொண்டார்.
பின்னர், “என்னைச் சந்திக்க யாராவது உங்களைத் தடுக்கிறார்களா? தொகுதி சார்ந்த எந்தப் பிரச்சினை என்றாலும் என்னை எப்போது வேண்டுமென்றாலும் அணுகலாம். நீங்கள் தொகுதியில் செய்யக் கூடிய பணிகள்தான் அடுத்த முறை உங்களை வேட்பாளராக நிற்க வைக்கும்” என்று எம்எல்ஏ.க்களிடம் முதல்வர் கூறி அனுப்பி உள்ளார்.
மூன்றாவது கட்டமாகச் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனத்துக்கு உள்ளான 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முதல்வர் விஜய் தீவிர விசாரணை செய்துள்ளார். அப்போது, “பொது மக்கள் மத்தியில் நமக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுக்குச் சேவை செய்யதான் நாம் வந்திருக்கிறோம். பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சிக்குக் கெட்ட பெயர் வரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நீங்கள், உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். உங்கள் மீது புகார் வந்தால், யார் தவறு செய்தாலும் நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். தேவையற்ற சர்ச்சையில் சிக்காதீர்கள்” என்று விஜய் எச்சரித்துள்ளார்.
அத்துடன், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன். மேலும், குதிரை பேரம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் விரிக்கும் சதி வலையில் சிக்கி விடாதீர்கள். ஆட்சியைக் கவிழ்க்க நினைப்போரின் முயற்சிகளுக்கு வழி வகுக்க வேண்டாம். மக்கள் பணிதான் நமக்கு முக்கியம். நமக்கு எதிராக அதிக கருத்துகள் இருப்பதாக யாரும் தொய்வடைய வேண்டாம். உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்று எம்எல்ஏ.க்களுக்கு விஜய் அறிவுரை வழங்கி உள்ளார்.
அதேபோல், அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சரியாக 2 மணி நேரம் 48 நிமிடங்கள் இந்த கூட்டத்தை நடத்தி முடித்த பின்னர் முதல்வர் விஜய், 6.38 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 105 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் பேரவைத் தலைவர் என்ற முறையில் ஜே.சி.டி.பிரபாகரும், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வருகையையொட்டி அமைச்சர் நாத்தும், மெக்கா சென்ற காரணத்தால் எம்எல்ஏ முஸ்தபாவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் வி.எஸ்.பாபு ஆகிய 4 பேரும் பங்கேற்கவில்லை.
அத்துடன், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆண் எம்எல்ஏக்களுக்கு பட்டு வேட்டி மற்றும் சட்டையும், பெண் எம்எல்ஏக்களுக்குப் பட்டுப்புடவையும் முதல்வர் விஜய் தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 10 அமைச்சர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் ஆனந்த் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது