நயினார் நாகேந்திரன்
சென்னை: அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் அமைச்சர் ரமேஷ். தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துக் கோயில்களின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோயில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ முஸ்தபாவை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோயிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது?
இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்துக் கோயில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "லைம்லைட்" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே.
சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோயிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோயிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.