“தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா?” - தவெக அரசுக்கு ஆ.ராசா கேள்வி

“தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா?” - தவெக அரசுக்கு ஆ.ராசா கேள்வி
Updated on: 
3 min read

சென்னை: “தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விஷயம். தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” என திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “எஸ்ஐஆர் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்திருக்கிற சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்பதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று திமுகவின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். எஸ்ஐஆர்-க்கு நாங்கள் ஆதரவாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.

ஆனால், எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம்தான் அழுத்தம் திருத்தமாக நாடாளுமன்றத்திற்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். சில மாநில முதலமைச்சர்கள் சென்னைக்கே வந்து இது குறித்து விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தொடர்ந்து எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து, அதனால் ஏற்படும் பாதிப்புகளை அம்பலப்படுத்தி வருகின்ற பிரதான அரசியல் கட்சியாக இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

காலவரிசைப்படி திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பதை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அரசியல் ஆர்வலர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய தினம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

அந்தத் தீர்மானத்திலேயே காங்கிரஸ் கட்சியினுடைய நிலைப்பாடு என்ன, எங்களைக் கேள்வி கேட்பதற்கான தார்மீக உரிமை அவர்களுக்கு இருக்கிறதா என்பதையும் நாங்கள் கேள்வி எழுப்பியிருக்கிறோம். எனவே, எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்காகத்தான் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

எஸ்ஐஆர்-ல் தவறுகள் நடந்திருந்தால், அவை எப்போது வேண்டுமானாலும் வெளிச்சத்திற்கு வரலாம். அப்படி வரும்போது நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறுகிறார்கள். அவர்கள் எந்தக் கணக்கில் அப்படிச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பேசுவதெல்லாம் ஒரு தனிக் கணக்காக இருக்கிறது.

எதிர்க்கட்சியினரே திமுக தோல்வியடைந்ததற்கு எஸ்ஐஆர் ஒரு காரணம் என்று கூறும்போது, ஜனநாயகத்தில் அதை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்தவில்லை, தேர்தலை நடத்துபவர் திருடர் என்று கூறுகிறார்கள். அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அவர்கள் எங்களிடம் எதுவும் பேசவில்லை. நாங்களும் அவர்களிடம் எதுவும் பேசவில்லை.

முதலமைச்சர் பதவியேற்ற மேடையிலேயே ஒரு கையைக் காட்டினார். எல்லோருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தவில்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூச்சலிட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பி மக்கள் வாக்களித்திருக்கலாம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கலாம். பரவாயில்லை.

இப்போது விஜய் முதலமைச்சரான பிறகு, போதைப்பொருள்கள் ஒழிப்புக்கு 65 குழுக்களை அமைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த 65 குழுக்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. உங்களிடம் உளவுத்துறை இருக்கிறது. 65 குழுக்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, டெல்லியிலிருந்து மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் (DRI) வந்து இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு, டெல்லியில் பேசினால் சுமார் 800 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இவ்வளவு பெரிய அளவில், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விஷயம்.

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 135 கிலோ போதைப்பொருள் இங்கிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது.

நான் மீண்டும் கேட்கிறேன். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. இங்கு 65 குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் வெறும் கட்சிப் பிரமுகர் மட்டுமல்ல. தொகுதிப் பொறுப்பாளர். திமுகவில் யாராவது தவறு செய்துவிட்டு, ராஜாவுடனோ, உதயநிதியுடனோ, பரந்தாமனுடனோ புகைப்படம் எடுத்திருந்தால், அவர்களைத் திமுகவினர் என்று சொல்வீர்கள்.

ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இருந்தவர். மயிலாடுதுறை மாவட்டம், கீழையூர் ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாகவும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்பாகப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட செய்திகள் வந்திருக்கின்றன. ஈரோட்டைச் சேர்ந்த அருணன் என்பவரிடம் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தொடர்பாக 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பூபதி ராஜா என்ற நிர்வாகி தொடர்பாக ஜூன் 26ஆம் தேதி வாகனச் சோதனையில் 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இவர்கள் எல்லோருமே கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், எங்களுடன் யாராவது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால், அதை வைத்துக்கொண்டு எவ்வளவு அரசியல் செய்வீர்கள்.

அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை வைத்து எவ்வளவு பிரச்சாரம் செய்தீர்கள். ஆனால், இப்போது உங்கள் கட்சியின் நிர்வாகி, தேர்தல் பொறுப்பாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் தொடர்பாக இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் இந்தப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

கடந்த காலங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாகச் சட்டமன்றத்தில் பல்வேறு புள்ளிவிவரங்களைப் பேசியிருக்கிறார்கள்.

இப்போது இந்தச் சம்பவம் குறித்து அவர்களிடம் போய்க் கேளுங்கள். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேளுங்கள்.

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயங்கரவாதச் செயல்களுடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மூளைச் சலவை செய்வதற்கும், சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்கும் இதுபோன்ற வலையமைப்புகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது; நிதி தொடர்பான அச்சுறுத்தலும் இருக்கிறது.

இதில் மர்மம் எதுவும் இல்லை என்று சொல்வதைவிட, நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தாலே பல கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களை அரசாங்கம் அளிக்க வேண்டும்.

உங்களுடைய போதைப்பொருள் தடுப்புப் படைகள் எங்கே போயின? போதைப்பொருளுக்கு எதிராகப் பிரசாரம் செய்தீர்கள். மாணவர்கள் மத்தியில் நின்று சத்தியம் செய்தீர்கள். அந்தச் சத்தியம் என்ன ஆனது?

எல்லாமே ரீல்ஸாகத்தான் இருக்கிறதா? நீங்கள் செய்த பிரசாரங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொளிகளுக்காக மட்டும்தானா? வெறும் ரீல்ஸ்களில் தங்களை நல்லவர்களாகச் சித்தரித்துக்கொண்டு செயல்படுவதால் மட்டும் போதாது. உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

“தமிழகம் போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா?” - தவெக அரசுக்கு ஆ.ராசா கேள்வி
“தவெக இப்போது ‘பிரேக்கிங் பேட்’ பார்ட்டி” - ‘மெத்’ கடத்தல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in