திமுக வேட்பாளர் பரந்தாமன்
மதுராந்தகம்: “இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும். மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும்” என திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத்(அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மக்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது கூட முகமலர்ச்சியோடு என்னை வரவேற்கிறார்கள். அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மதுராந்தகம் வாக்காளர்கள் திமுகவுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல காத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதையும் நான் மீறவில்லை. தவெகவின் புகாரை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளேன். தவெகவின் குதிரைபேரத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டதால் ஆதவ் அர்ஜுனா பதறிவிட்டார். அவர் கொடுத்துள்ளது உப்புசப்பில்லாத புகார். அந்தப் புகாரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் திமுக சந்திக்கத் தயாராக உள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறும். மதுராந்தகத்தில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெறும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது, அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என்றார்.