பூச்சி முருகன்
மதுரை: திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றிருந்தபோது, உடல் நலம் பாதித்து திடீரென்று மயக்கமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் தனி விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் கொண்டு செல்லப்படுகிறார்.
சென்னையில் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளராக இருப்பவர் பூச்சி முருகன். திரைப்பட நடிகர், தயாரிப்பாளராகவும், திரைப்பட நடிகர் சங்கத்திலும் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாடு பயணம் சென்ற நிலையில் சிறிது ஒய்வுக்காக கடந்த இரண்டு நாளுக்கு முன்பு திமுக முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி, மதுரையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட சில நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கு அவர்கள் அறையில் தங்கி இருந்தபோது, நேற்று மதியத்திற்கு மேல் திடீரென பூச்சி முருகனுக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனிருந்த திமுக நிர்வாகிகள், கொடைக்கானல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை கார் மூலம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்க உடனடியாக கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரத்தக் கசிவை தடுப்பதற்கான தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பூச்சிமுருகனின் மகன் மற்றும் குடும்பத்தினர், திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று காலை சென்னையில் இருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தனர். முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட உள்ளூர் திமுகவினரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.
இந்நிலையில் அவரை சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க அவரது குடும்பத்தினர், திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அவரை டிஸ்சார்ஜ் செய்து இன்று மதியம் ஆம்புலன்ஸில் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு சென்று, பிறகு அங்கு இருந்து தனி விமான மூலம் சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.