முதல்வர் ஸ்டாலின்

 
தமிழகம்

“தமிழகம் மேலும் வளர்ச்சி காண இன்னும் 5 ஆண்டு திமுக ஆட்சி தொடர வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும்’ என திருச்சி மாநாட்டையொட்டி திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சிறுகனூர் மாநாட்டுக்கு வரவேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், ‘ எல்லாச் சாலைகளும் ரோமாபுரி நோக்கிச் செல்கின்றன என்பது போல, எல்லாச் சாலைகளும் இப்போது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியை நோக்கியே பயணிக்கின்றன. திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்திடும் உறுதியுடன் 2026 தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான பாசறையாக இந்த மாநாடு விளங்கிடும்.

          

70 ஆண்டுகளுக்கு முன், ‘அன்பில் அழைக்கிறார்’ என 1956-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிற்குக் கழகத் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார் அண்ணா. ‘தம்பி வா.. தலைமையேற்க வா’ என மாநாட்டுத் தலைமைக்கு நெடுஞ்செழியனை முன்மொழிந்து அண்ணா ஆற்றிய உரையும், அந்த மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களிடம், தேர்தலில் திராவிட முன்னனேற்றக் கழகம் போட்டியிடலாமா வேண்டாமா என உட்கட்சி ஜனநாயகத்துடன் வாக்கெடுப்பு நடத்தி, பெருவாரியான கழகத் தொண்டர்கள், தேர்தலில் கழகம் போட்டியிட வேண்டும் என்று வாக்களித்ததன் அடிப்படையில், தீர்மானம் நிறைவேற்றி, 1957-இல் முதல் முறையாகத் தேர்தல் களம் கண்டது நம் லட்சிய இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம்.

காஞ்சியிலே அண்ணா வெற்றி பெற்றுச் சட்டமன்றம் சென்றார். எழும்பூரிலே அன்பழகனும், பெரம்பூரிலே சத்தியவாணிமுத்துவும் எனக் கழகத்தின் சார்பில் முதன்முறையாக 15 பேர் சட்டமன்றத்திற்கும், இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.

ஒன்றிய அரசு இந்தியைத் திணித்தால் இன்று மட்டுமல்ல, அன்று முதலே அதற்கான எதிர்ப்புணர்வை உயிரைத் தியாகம் செய்து வெளிப்படுத்தி, தமிழைக் காப்பாற்றிய மண் திருச்சிதான். சிங்கத் தமிழன் செந்தமிழ்த் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி தன் தேக்கு மரத் தேகத்திற்குத் தீ வைத்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்த திருச்சி மண்ணில், தாய்த்தமிழ் உணர்வு அணையாத நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால்தான், இப்போது ரயில்வே கோட்டத்தின் நுழைவாயிலின் பெயரில் இந்தியைத் திணிக்கும் வேலையைச் செய்தபோது, திருச்சி மாவட்டக் கழகத்தினர் பொங்கி எழுந்து எதிர்ப்புணர்வைக் காட்டிய காரணத்தால், அங்கே இந்தி அகன்றது. தமிழ் நிலைத்து நின்றது.

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே திருச்சி சிறுகனூரில் நடந்த கழகத்தின் தேர்தல் சிறப்பு மாநாட்டில்தான் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை என்ற அறிவிப்பை உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன். மக்கள் அளித்த ஆதரவால், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அமைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில், 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது.

அரசியல் எதிரிகளின் சதிகளால் அதற்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்று முன்கூட்டியே மூன்று மாத உரிமைத் தொகையையும், கோடைகால சிறப்புத் தொகையையும் வழங்கியதுடன் முதியோர் உதவித் தொகை பெறுவோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அரசின் பராமரிப்பு உதவி பெறுவோர் என ஏறத்தாழ 40 லட்சம் பேருக்கும் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கழகம் முதன்முதலில் போட்டியிட்ட 1957-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் வாக்கு கேட்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் அண்ணா. கருணாநிதியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தவை.

உங்கள் பேரன்பையும் பெரும் உழைப்பையும் நம்பி 2021-ஆம் சட்டமன்றத் தேர்தல் களத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வழிநடத்தக் கூடியவனாகக் களம் கண்டேன். இப்போதும் அந்தக் கூட்டணியை வழிநடத்துபவனாக உங்களில் ஒருவனான நான் இருக்கிறேன்.

வருகின்ற மார்ச் 9-ஆம் நாள் கழக உடன்பிறப்புகளின் திருமுகம் கண்டு நான் மகிழும் வாய்ப்பு அமையவிருக்கின்ற இதே திருச்சி சிறுகனூரில்தான் 5 ஆண்டுகளுக்கு முன் 2021 மார்ச் 7ஆம் நாள் உங்களின் திருமுகம் கண்டேன். அத்துடன், 7 அம்சத் திட்டங்களையும் வெளியிட்டேன். பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூகநீதி ஆகிய 7 அம்சங்களை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களைச்சிறுகனூரில் வெளியிட்டேன். அதில் முதல் இலக்காக நான் சொன்னது, அடுத்த பத்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது” என்பதுதான்.

கழக உடன்பிறப்புகளின் உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவாலும் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளிலேயே, இந்தியாவிலேயே 11.19% என்கிற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றே ஒரே மாநிலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாமல் வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசினாலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய இன்னும் 5 ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும். 2021-இல் சிறுகனூர் மாநாட்டில் அதைத்தான் வலியுறுத்தினேன். பத்தாண்டுகாலம் திமுக ஆட்சி தொடர்ந்து அமைந்திட வாய்ப்பளியுங்கள் என்று கேட்டேன்.

திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள், ’தமிழ்நாட்டைப் பாருங்கள்’ என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகாலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும்.

2026-இல் தொடரப்போகும் திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களை முன்வைத்து ‘தமிழ்நாடு 2030‘ என்கிற 14 முக்கிய அம்சங்களை, மார்ச் 6-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற ‘கனவு மெய்ப்படும்’ நிகழ்வில் வெளிப்படுத்தினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT