திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 
தமிழகம்

“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘முதல்வர் விஜய்யின் திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது: “ஓர் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்து நிற்பது சாதாரண சாதனை கிடையாது. 75 ஆண்டுகளுக்குப் பிறகும், அதே கம்பீரத்தோடு காட்சி அளிப்பதும் சாதாரண சாதனை கிடையாது.

இந்த இயக்கத்துக்கு கொள்கையும் லட்சியமும்தான் முக்கியம். நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சிக்கும் நமக்கும் வித்தியாசம் என்ன? 17 லட்சம் வாக்குகள்தான். எதிரி யார் என்று சரியாகக் கணித்துப் பணியாற்றியிருந்தால், இந்தத் தோல்வியே ஏற்பட்டிருக்காது.

ஆட்சி அமைத்துள்ள கட்சிக்கு, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், ஏதோ பெரிய அலை அடித்தது போலவும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தது போலவும் ‘இமேஜ் பில்டப்’ செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களின் ஆட்சி நடப்பதே நம் கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவோடுதான். ஆனால், ஆதரவு தந்த அந்தக் கட்சிகளையும் நம்பாமல், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதுதான் ஆளுங்கட்சியின் லட்சணம்.

இப்படியொரு பலவீனமான ஆட்சியை அமைத்துள்ள ஒரு கட்சி என்ன செய்ய வேண்டும்? நியாயமாக, மக்கள் நலத்திட்டங்களைச் செய்து நல்ல பெயர் வாங்கப் பார்க்க வேண்டும். ஆனால் அதையா செய்கிறார்கள்? இப்போது ஆளும் தவெக அரசின் வேலை என்ன? நம் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவது; இல்லை என்றால் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவது. இதுதான் மாற்றமா?

முதல்வரைப் பொறுத்தவரை, தினமும் ஷூட்டிங் மூடில் தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிவிட்டு, யார் இயக்குநர், யார் கேமராமேன் என்று சொல்லாமல் இப்போது மக்கள் முன்னாடி நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் பஞ்ச் டயலாக், இப்போது ஃபாரின் ஷூட்டிங். எல்லாமே ரீல்ஸ்தான்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியை சற்றேறக்குறைய 25 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். இதுவே திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், இந்நேரம் மகளிருக்கு உரிமைத் தொகையாக 2,000 ரூபாய் கிடைத்திருக்கும். அனைத்துக் குடும்பங்களுக்கும் 8,000 ரூபாய் இல்லத்தரசி கூப்பன் கிடைத்திருக்கும். 25 லட்சம் உழவர்களுக்குப் புதிய மின்சார மோட்டார்கள் வழங்கியிருப்போம்.

ஆனால், மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் என்ன நடக்கிறது? நான்கு மாதங்களுக்கு முன்னால் அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம் என்ன விலைக்கு விற்றன... இன்று என்ன விலைக்கு விற்கின்றன? விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தைச் சொல்லப் போதும். நம் ஆட்சியில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இந்த த.வெ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வில் முதன்மை மாநிலமாக ஆகப் போகிறோம்.

முதல்வரைப் பொறுத்தவரைக்கும், அவரது குறைகளை, அவர் நடத்திக் கொண்டிருக்கும் துக்ளக் தர்பாரை மக்கள் பேசக்கூடாது என்பதற்காக அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், இப்போது நாட்டுக்கு அவசியமான செய்தி என்ன தெரியுமா? ‘முதலமைச்சர் இன்று கோட் போட்டார்’, ‘வெள்ளிக்கிழமையா... பட்டு வேட்டி – பட்டு சட்டை!’, ‘நெற்றியில் என்ன நிறப் பொட்டு?’, ‘கையில் என்ன கயிறு?’, ‘ஜோசியர் இன்று என்ன சொல்லியிருக்கிறார்?’ - இதுதான் இன்றைக்குச் செய்திகளாகிவிட்டன. முதல்வரும் ‘இதைச் செய்தாலே போதும்’ என்ற மனநிலையில்தான் இருக்கிறார்.

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, டிரில்லியன் டாலர் பொருளாதாரம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' என்று பேசப்பட்ட நாட்டில்... அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி கோட்-சூட், வேட்டி, சட்டை, காலால் நடந்தார், கையால் சைகை செய்தார், வாயால் சாப்பிட்டார் என்றுதான் செய்திகள் வருகின்றன. அதைத்தான் டிரெண்டும் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கே மிகவும் அருவருப்பாக, அசிங்கமாக இருக்கிறது.

அவரின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால், த.வெ.க. ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில்தான் போட்டியே... ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு. இப்படித்தானே ஆக்சன் செய்வார். எது அதிகம் என்பதுதான் போட்டியே! பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், ஆளுங்கட்சியினரே போதைப்பொருட்களை விற்பனை செய்வது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது என குற்றவாளிகளின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது.

த.வெ.க. ஆட்சியில் சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. ஆனால், முதல்வராக இருப்பவருக்கு இதைப் பற்றியெல்லாம் துளிகூடக் கவலையே இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இப்படி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இவர்களால் மக்களை எல்லா நாளும் ஏமாற்ற முடியாது.

கடந்த வாரம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ததாக முதல்வரே சொன்னார். இதற்கு முன்னால் நான் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தபோது என்ன பேசினார்? “சி.எம். சார்... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று மேடையில் கத்தினார். அவர் அளவிற்கு நான் இறங்கி வரத் தயாராக இல்லை. இப்போது, நான் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் அவரைப் பார்த்து, “சி.எம். சார்... இந்தியாவில் இருக்கும் நிறுவனத்திற்கு எதுக்கு லண்டனில் போய் கையெழுத்து போடுகிறீர்கள்?” என்று சத்தமாகக் கேட்கிறார்கள்.

அதைவிட இன்னொரு பெரிய கொடுமை என்ன தெரியுமா? தொழில் துறை அமைச்சர் இல்லாமல், தொழில் துறை செயலாளர் இல்லாமல் முதலீடுகளை ஈர்க்கப் போயிருக்கிறார் முதல்வர். இதுதான் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணமா?

அதுமட்டுமல்ல, ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூடத் தனது மாண்பை இழந்து இப்போது நிற்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரைப் பார்த்திருப்பீர்கள். அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். என்ன நடக்கிறது? முதல்வர் சிரிப்பதைப் பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு, சட்டமன்றப் பேரவையில் ஸ்கிரீன் வைக்கச் சொல்லி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்கிறார்கள். இதுதான் நாட்டிற்குத் தேவையா?

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிசா - சர்க்காரியா கமிஷன் என்று சம்பந்தம் இல்லாமல் பேசி அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; டைவர்ஷன் செய்கிறார்கள்.

மிசாவைப் பற்றிப் பேசுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: ‘என் மிசா கைதை உங்கள் எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!’, ‘என்னுடைய தியாகத்திற்கு மதிப்பெண் போட உங்கள் எவனுக்கும் தகுதி கிடையாது!’ என் மிசா வரலாற்றை, சிட்டிபாபு தனது சிறை டைரியில் பதிவு செய்திருக்கிறார். அதுதான் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டு.

அதுமட்டுமல்ல, சிறைச்சாலைச் சித்திரவதைகளைப் பற்றி விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமைத்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கை இருக்கிறது. சாட்சி எல்லாம் சென்று சொல்லி இருக்கிறேன். அனைவரும் வந்து சொன்னார்கள். படிக்கத் தெரிந்தவன் அதையெல்லாம் எடுத்துப் படிக்கட்டும்.

வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால், அவதூறு பரப்பி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சிக்கு நியாயமாக 'தமிழக வெற்றிக் கழகம்' என்று இல்லாமல், 'தமிழக ரீல்ஸ் கழகம்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். தி.மு.க. தந்தது ரியல் ஆட்சி. இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி.

ஒரு முறை மக்கள் ஏமாந்திருக்கலாம். தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால், ஏமாறப்போவது இப்போது இருக்கும் முதல்வர்தான். அவதூறுகளைப் பரப்பி, கொச்சையாகப் பேசி, தி.மு.க.வை அவமானப்படுத்தலாம், பலவீனப்படுத்தலாம் என்று நினைத்துப் பலர் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் 78 வருடங்களாக நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன இந்த அவதூறுகளைப் பரப்பும் எதிரிகள்தான் மாறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, நாங்கள் உறுதியாக நிலைத்து நின்று கொண்டுதான் இருக்கிறோம்.

தன்னை விட இயக்கமும் கொள்கையும்தான் பெரிது என்று நினைக்கிறவர்கள்தான் திமுக தொண்டர்கள். நாங்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர காத்திருக்கிறோம். நேரம் விரைவிலேயே வரும்.

விரைவில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வரப்போகிறது. இது முறையாக வரும் தேர்தலா? இல்லை, திணிக்கப்பட்ட தேர்தல். எவ்வளவு அகம்பாவம் இருந்தால், வேறு கட்சியில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை விரலில் வைத்த மை ஈரம் காயவதற்கு முன்னால் ராஜினாமா செய்ய வைத்திருப்பார்கள்? அதுமட்டுமல்ல, வெட்கமே இல்லாமல் இப்போது அவர்களையே தங்களுடைய சின்னத்தில் மீண்டும் நிற்க வைத்திருக்கிறார்கள். கேட்டால், குதிரை பேரம் இல்லையாம்; தூய ஆட்சியாம். இதுதான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா?

பொதுவாகச் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால்தான் இடைத்தேர்தல் வரும். முதல்முறையாக ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வருகிறது. இதைத்தான் திமுகவினர் ஆட்சியின் தோல்விகளோடு சேர்த்து, இரண்டு தொகுதியிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அரசாங்கமே இன்றைக்குச் செயலிழந்து போயிருக்கிறது. காலையில் கூடச் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். ஒரே நாளில் 8 கொலைகள். அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில். இரட்டைக் கொலைகள், ஆணவக் கொலைகள், லாக்கப் படுகொலைகள், டாஸ்மாக் தகராறு கொலைகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலைகள் என ஒவ்வொரு நாளும் விடிந்தால் எண்ண முடியாத அளவுக்கு கொலைகள்.

மின்சாரம் இல்லாமல் நடுராத்திரியில் குழந்தைகளோடு மக்கள் போராடுகிறார்கள். தொழில்கள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன. ஏழை மக்களுக்கு எட்டாத அளவிற்கு விலைவாசி உயர்ந்து, பெண்கள் எல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கவே பயப்படுகிறார்கள். வருமானம் போதவில்லை. இவர்கள் சொன்ன 2,500 ரூபாயும் வரவில்லை. பணம் கொடுத்தாலும் ஆவின் பால் கிடைக்கவில்லை. ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. 12 பேர் இறந்துவிட்டார்கள். இனிமேல்தான் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் கவர்ச்சியால் சரிகட்டலாம் என்று ஆணவத்தோடு இருக்கும் ஒருவர்தான் முதல்வராக இருக்கிறார். ஊடகங்களைச் சந்தித்துப் பதில் சொல்ல மாட்டேன் என்று திமிராக இருக்கிறார். இந்தத் திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல். அதனால், மதுராந்தகம், தாராபுரம் வாக்காளப் பெருமக்களே, ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் புகட்டத் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று இந்த முப்பெரும் விழா மேடையில் நின்று கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம் காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றம் கண்டதால்தான் 78 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. அதே வலிமையோடு இருக்கிறது. அதற்கு இன்னும் வலிமை கூட்டத்தான் கழக மறுசீரமைப்புச் செய்யத் தொடங்கியுள்ளோம். நம்மை மாற்றிக் கொண்டு, மக்களையும் கவர்ச்சியில் இருந்து மாற்ற வேண்டும். இன்றைய ஜென்ஸீ இளைஞர்களையும் கவர வேண்டும் என்றால், அவர்களின் மொழியில் பேச வேண்டும். அதுவும் எப்படிப் பேச வேண்டும்? அவர்களின் கைப்பேசியில் போய் சேரும் வகையில் பேசுங்கள்” என்றார் ஸ்டாலின்.

SCROLL FOR NEXT