திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
சென்னை: “தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்காகவே பாஜகவால் கொண்டுவரப்பட்ட ஒரு போர்வை தான் விஜய்” என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் தெரிவித்தார்.
மதுராந்தகம். தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பரந்தாமன் கூறியதாவது: வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் தலைமைச்செயலக அறைக்குள் அமைச்சர்கள் செய்கின்ற செயல்கள் அநாகரீகத்தின் உச்சமாகும். வாக்குக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கிராமங்களைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கனகராஜ் பகிரங்கமாகச் சவால் விட்டதை வைகோ பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலே குதிரைப்பேரத்தால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என்று அனைத்துக் கட்சிகளுமே கூறி வருகின்றன.
இன்னும் 15 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யப் போவதாக ஆதவ் அர்ஜுனா கூறுவது அவர்களின் நோக்கத்தைக் காட்டுகிறது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்காகவே பாஜகவால் கொண்டுவரப்பட்டவர் தான் விஜய். அவர் தனிப்பெரும் அரசியல் ஆளுமையால் வரவில்லை, இதற்குப் பின்னால் பாஜகவின் மூளையே செயல்படுகிறது. இவ்வாறு பரந்தாமன் தெரிவித்தார்.