தமிழகம்

“தட்டாஞ்சாவடி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி எந்தவொரு நல்ல திட்டத்தையும் தரவில்லை” - திமுக அமைப்பாளர் சிவா

அ.முன்னடியான்

புதுச்சேரி: ரங்கசாமியை எம்எல்ஏ-வாக, அமைச்சராக, முதல்வராக, புதிய கட்சித் தலைவராக உருவாக்கிய தொகுதி தட்டாஞ்சாவடி, அப்படி தன்னை உயர்த்திய தட்டாஞ்சாவடி மக்களுக்கு முதல்வர் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செய்து கொடுக்கவில்லை என்று தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமைப்பாளர் சிவா விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து திலகர் நகர், ராஜாஜி நகர், பாக்குமுடையான்பேட், அவ்வை நகர், பொன்னியம்மன் கோயில் வீதி பகுதிகளில் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி, மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கொட்டுப்பாளையம் பகுதியில் திமுக அமைப்பாளர் சிவா, மழையிலும் வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து இன்று கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் வீதி, கோகுலன் வீதி, நாகாத்தம்மன் கோயில் வீதி, செல்வ விநாயகர் கோயில் பின்புறம் பகுதிகளில் திமுக அமைப்பாளர் சிவா, காலாப்பட்டு எம்எல்ஏ செந்தில் (எ) ரமேஷ் ஆகியோர் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.

அப்போது திமுக அமைப்பாளர் சிவா பேசியதாவது: “இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல். ரங்கசாமியை எம்எல்ஏ-வாக, அமைச்சராக, முதல்வராக, புதிய கட்சித் தலைவராக உருவாக்கிய தொகுதி தட்டாஞ்சாவடி, அப்படி தன்னை உயர்த்திய தட்டாஞ்சாவடி மக்களுக்கு முதல்வர் எந்த ஒரு நல்லத் திட்டத்தையும் செய்து கொடுக்கவில்லை.

அப்படியிருந்தும் இந்த முறை முதல்வர் தொகுதி என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள். அதுவும் 5 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. ஆனாலும் தொகுதியை கைகழுவிவிட்டார். தற்போது பிரச்சாரத்துக்கு வரும் முதல்வர் தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார். தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அரசு இடமே இல்லாதபோது இது சாத்தியமா? மாநில அந்தஸ்து உள்ளிட்ட எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாத முதல்வர்.

அரசு வேலைக்கு வைத்தவர்கள் எல்லாம் நீதிமன்ற வாசலில் தவம் கிடக்கின்றனர். அரசுத் துறைகளில் இன்னும் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தொகுதியில் இருந்து இவர் ஆட்சி காலத்தில் பாசிக், பாப்ஸ்கோ போன்ற சார்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று வேலையில்லாமல் உள்ளனர்.

நிறைய தொழிலாளர்கள் வருமானமின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தொழிலாளர்களை அரசு இன்னும் நிரந்தரம் செய்யாமல் வஞ்சிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து அரிசி போடுவோம் என்றார்கள். போடவில்லை. இப்படி எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசால் செய்ய முடியவில்லை. திமுக நிறுத்தியுள்ள வேட்பாளர் சேது செல்வம் இந்த தொகுதியில் பிறந்து வளர்ந்தவர்.

மக்களுக்காக, தொழிலாளர் வர்க்கத்திற்காக ஓய்வும், சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து போராடக் கூடியவர். திமுக வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் மக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர். ரங்கசாமி முதல்வர் ஆகிவிட்டார். அதனால் உங்களுக்குத்தான் வாய்ப்பு என்று மக்கள் பெரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அவரை வெற்றி பெற வைத்தால் தொகுதி மக்களின் பிரச்சினையை சட்டப்பேரவையில் புதுச்சேரியின் குரலாக ஒலிப்பார்.” இவ்வாறு திமுக அமைப்பாளர் சிவா பேசினார்.

SCROLL FOR NEXT