சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆலோனைக் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மே 13 ம் தேதி சட்டப்பேரவை கூடியது. வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது.
இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு ஆளுநர் ஆர். வி.அர்லேகரை சந்தித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில், 18-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அன்று ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார். மறுநாள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவை உறுப்பினர்கள் பேசுவார்கள்.
இந்நிலையில், ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பேசுவது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திமுக கொறடா எ.வ.வேலு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், `‘திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஜூன் 17-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும்.
ஆளுநர் உரை தொடர்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’' என்று கூறப்பட்டுள்ளது.
பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எந்தெந்த உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.