தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு, சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். அரசுக்கு எதிராக கோஷமிட்டு பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், ‘வாயைத் திறங்க சிஎம்’ என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். பேரவைக்குள் செல்வதற்கு முன்பு ‘தற்குறி ஆட்சிக்கு தமிழ்நாடே சாட்சி’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’, ‘திரையில் நாயகன் தரையில் வில்லன்’, ‘கதறல் கேட்குதா சிஎம்’ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, தலைமைச் செயலக வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது, அரசு தயாரித்து கொடுக்கக்கூடிய எந்த உரையையும் ஆளுநர் முழுமையாகப் படித்தது கிடையாது. அதில் பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனால், இந்த முறை ஆளுநர், இந்த அரசு என்ன தயாரித்துக் கொடுத்திருக்கிறதோ, அதை ஒரு எழுத்து மாற்றாமல் அப்படியே வாசித்திருக்கிறார்.
அதேபோல் திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் வாசிக்கப்படும். முடியும்போது தேசிய கீதம் ஒலிபரப்பப்படும். ஆனால் 2 முறை தேசிய கீதத்தை ஒலிபரப்பி இருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த அரசுக்கும், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதோ என்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.
முதல்வர் தன்னைப் பற்றியும், தன் கட்சியை பற்றியும் சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் உரையாகவே இது உள்ளது. இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல்வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய படுகொலைகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. பிரச்சினைகளைப் பற்றி என்றைக்கு நம் முதல்வர் வாயை திறப்பார்? என்று கேட்பதற்காகத்தான், இன்றைக்கு திமுக எம்எல்ஏக்கள் எல்லாம் கருப்பு பேட்ஜை அணிந்து வந்தோம்.
திமுக அரசு கொண்டுவந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை குறுகிய எண்ணத்தோடு மாற்றி இருக்கிறார்கள். ‘பீரோ புல்லிங்’ மாதிரி இன்றைக்கு நம் முதல்வர், தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவின் எம்எல்ஏக்களை எல்லாம் ‘எம்எல்ஏ புல்லிங்’ செய்து கொண்டிருக்கிறார். மாற்றம் மாற்றம் என்று கூறினார்கள். ஆனால் ‘மாற்றம் இல்லை; நாம் எல்லாம் சேர்ந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டோம்’ என்று மக்களை புலம்ப வைத்திருக்கிறது இந்த அரசு. இவ்வாறு அவர் கூறினார்.