தமிழகம்

பாலியல் புகார்கள் குறித்து விமர்சனம்: அமைச்சருடன் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

சட்டப்பேரவையில் கடும் அமளி

செய்திப்பிரிவு

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற விவாதம்:

ஆஸ்டின் (திமுக): தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். ஆனால், தவெக ஆட்சியில் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள் ளனர். இந்த அரசு நிர்வாகத் தோல்வி அடைந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநர் உரையில் எந்த திட்டமும் இல்லை. இது ஒரு வெற்று உரை. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எப்போது, என்ன பேச வேண்டும் என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும். கொளத்தூரில் அவர் 5 நிமிடங்கள் பேசியதற்கே என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும்.

(அமைச்சர் இவ்வாறு கூறியதும், திமுக உறுப்பினர்கள் எழுந்து அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பதிலுக்கு, தவெக உறுப்பினர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி ஏற்பட்டது.

உடனே, பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர் எழுந்து, அனைத்து உறுப்பினர்களும் அமருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர். விவாதம் தொடர்ந்தது.)

ஆஸ்டின்: தவெக ஆட்சியில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்வர் வாயே திறப்பது இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: திமுக ஆட்சியின்போது, தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 36 மணி நேரம் ஆகியும் வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. அப்போது, முதல்வர், அமைச்சர்களும் வாய் திறக்க வில்லையே.

ஜி.வி.மார்க்கண்டயேன் (திமுக): அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை’, மாவட்டங்களில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு படை ஆகிய 3 திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளன. தவெக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது.

ஒரே மாதத்தில் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. ரவுடிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். நாட்டிலேயே அமைதியான மாநிலமாகத் திகழும் தமிழகம் இனிமேல், அச்சமான மாநிலம் ஆகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

SCROLL FOR NEXT