திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசியதாகவும், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.