ஆதவ் அர்ஜுனா
சென்னை: “தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றதால், விசிகவை உடைக்க திமுக முயற்சிக்கிறது. இந்த ஆதிக்கம் தன் பண்ணையார்த்தனம்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்படாத, சமூக நீதி கணக்கெடுப்பை நடத்துவதாக ஆளுநர் உரை மூலமாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நாங்கள் தொடக்கம் முதலே மாண்போடு நடந்துகொண்டோம்.
கடந்த ஆட்சியில் ஆளும் கட்சி தரப்பில் சட்டப்பேரவையில் பேசுவதை மட்டுமே ஊடகங்களுக்கு வீடியோவாக கொடுப்பார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதை எப்போதும் வெளியிட்டது கிடையாது. ஆனால், எதிர்க்கட்சிகள் பேசியதையும் நேரலையில் ஒளிபரப்பியது தவெக அரசு. சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, ஆளும் கட்சியை சுறுசுறுப்பாக பணி செய்ய வைக்கிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சியாக பார்க்கவில்லை. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏக்கள், உதயநிதி ஸ்டாலினையும் மீறி தவெகவை கேலி, கிண்டல், நையாண்டிகள் செய்து ஒருமையில் பேசினர். முதல்வர் ஒவ்வொரு அவையிலும் 5 மணி நேரம் அமைதியாக குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார்.
உதயநிதி எங்களைப் பார்த்து குற்றம் சாட்டும்போது நாங்கள் அதற்கு பதில் கொடுத்தோம். குதிரை பேரம், சோஃபா மாடல், பெண்கள் பாதுகாப்பு என குற்றம் சாட்டும்போது நாங்கள் மாண்புடனும், மரபுடனும் பதில் சொன்னோம். முதல் நாளில் இருந்தே “முதல்வர் பேச மாட்டாரா?, அவர் ஊமையா?, தலையில் இடியே விழுந்தாலும் பேசமாட்டாரா?” என திமுக எம்எல்ஏக்கள் கேலி கிண்டல் செய்தனர்.
சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள் தான் முதலில் பேசுவார்கள். எல்லா கட்சியினரும் பேசிய பின்னர் இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். இறுதியாக எல்லாவற்றுக்கும் முதல்வர் பதிலளிப்பார். இதுதான் மரபு. ஒவ்வொரு நாளும், அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய மரபு இல்லை. நேரலையில் செல்கிறது என்பதற்காக, ‘முதல்வர் பேச மாட்டாரா?’ என போலியான பிரச்சாரத்தை உருவாக்கும் போது நாங்கள் அதற்கு பதில் அளித்தோம்.
இப்போது அவைக் குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கப்பட்டாலும், நேரலையில் அனைத்தையும் மக்கள் நேராக பார்க்கிறார்கள். நேர்மையான, தைரியமான மனது இருந்தால் தான் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியும். அந்த வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கிவிட்டார். 4 நாட்களாக சட்டப்பேரவையில் ‘தலையில் இடி விழுந்தாலும் முதல்வர் பேசமாட்டாரா?’ என எள்ளி நகையாடிய திமுகவை பார்த்து மரபு என்ன என்று கூட்டணிக் கட்சிகள் ஏன் கேட்கவில்லை. இதுபற்றி கம்யூனிஸ்ட் தோழர்களிடம் பேசியுள்ளோம்.
திருமாவளவன் 4 நாட்கள் அவையில் நடந்தவற்றை பார்க்க வேண்டும். பேசு, பேசு என்று சொன்னார்கள், முதல்வர் அதற்கு பதில் சொல்லி பேசினார். முதல்வர் பேசும் போது, ‘கட்சி நிதி’ என்று தான் சொன்னார். திமுக கட்சி நிதி என சொன்னாரா? கட்சி நிதி என சொன்னவுடன் திமுகவினர் ஏன் எழுந்தனர்? கடந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை, டிடிசிபி, பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ, பத்திரப்பதிவுத் துறையில் கடந்த ஆட்சியில் ஊழல் இல்லை என ஒருவரால் சொல்ல முடியுமா? கடந்த ஆட்சியில் துறை ரீதியாக ஊழலுக்கு திட்டம் போட்டார்கள். எந்த துறைக்கு எத்தனை சதவீதம் ஊழல் என திட்டம் போட்டார்கள். இந்த ஊழலை இப்போது முதல்வர் விஜய் ஒழித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையில் கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பள்ளிக்கும் உரிமம் புதுப்பித்தலுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் தெரியுமா? நாங்கள் லஞ்சமே வாங்கவில்லை என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சொல்லமுடியுமா? எல்லா பள்ளிகளிடமும் தலா ரூ.25 லட்சம் பணம் வாங்கினார்கள்.
கட்சி நிதி, குடும்ப நிதி என்றாலே திமுக என எல்லோருக்கும் தெரியும். இதனை பேச உதயநிதிக்கு எந்த நேர்மையும், தைரியமும் இல்லை. இதனால் தான் அன்று வெளிநடப்பு செய்து செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களிடம் பேசியதை அவையிலேயே பேசியிருக்கலாமே?
திமுக ஆட்சியில் 32 துறைகளில், 16 துறைகள் உதயநிதிக்கும், 16 துறைகள் சபரீசனுக்கும் பிரிக்கப்பட்டு, ஊழல் பணத்தை கலெக்ஷன் செய்தார்கள். இப்போது அனைத்து துறைகளிலும் ஊழல், லஞ்சம் இல்லாமல் உடனடியாக வேலை நடக்கிறது. திமுக எப்போதும் கொள்கையின்படி பேசாது, தனிப்பட்ட தாக்குதல்களையே நடத்தும். இதனை மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
விசிகவில் இருந்த பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததற்கு, ஸ்டாலின் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சி நடத்தினார். ஒரு முன்னாள் எம்எல்ஏ கட்சியில் இணைந்ததற்கு திமுக இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை எப்போதாவது நடத்தியிருக்குமா? அப்படியானால், ‘ நீங்கள் எங்கள் கூட்டணியை விட்டு சென்று விட்டீர்களா, உங்கள் கட்சியை நாங்கள் உடைக்கப் போகிறோம்’ என விசிகவுக்கு திமுக செய்தி கொடுக்கிறது. விசிகவை கடுமையாக விமர்சிக்கும்படி ஆ.ராசா போன்றோரை ஸ்டாலின் தூண்டிவிடுகிறார்.
விசிகவில் இருந்து விலகி வரும்படி ஆளூர் ஷாநவாஸிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசி வருகிறார். தவெகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றதால், விசிகவை உடைக்க திமுக முயற்சிக்கிறது. இந்த ஆதிக்கம்தான் பண்ணையார்த் தனம்.
இந்த ஆதிக்கத்தை நாங்கள் உடைப்போம். கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் உதயநிதியை புகழ்ந்து பேசினர். இந்த சட்டப்பேரவையில் நாங்கள் முதல்வர் விஜய்யை ஏதும் புகழ்ந்து பேசினோமா?
30 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக முன்பு எ.வ.வேலுவுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். இன்று மருத்துவக் கல்லூரிகள், திருவண்ணாமலை முழுக்க பினாமி நிலங்கள் உள்ளது. மனைவி, மகன் பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் தவறுதான். இதுபற்றி அதுசார்ந்த துறைகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்” என்றார்.