ராம சீனிவாசன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“சிறுபான்மையினர் வாக்குக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - ராம. சினிவாசன்

கி.மகாராஜன்

மதுரை: சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்பதால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரனின் 16-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர் நடிகை கஸ்தூரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பூர்ணசந்திரன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராம.சீனிவாசன் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் தீபம் ஏற்ற கோரிக்கை விடுத்து பூர்ணசந்திரன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட தமிழக அரசு முன் வரவில்லை. தொகுதி திமுக எம்எல்ஏ கூட ஆறுதல் கூறவில்லை.

கள்ளச்சாரம், விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் தமிழக அரசு தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு ஆறுதல் கூற கூட முன்வரவில்லை. அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பூர்ணசந்திரன் குடும்பம் திமுகவை சேர்ந்தது. இருப்பினும் திமுக அரசு எந்த அனுதாபமும் தெரிவிக்கவில்லை. இழப்பீடும் வழங்கவில்லை.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் சோறு கிடைத்துவிடுமா, எய்ம்ஸ் வந்துவிடுமா என திருமாவளவன் பேசியுள்ளார். கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் சோறு கிடைத்துவிடுமா? எல்லா இடங்களிலும் தமிழ் வாழ்க என்று போர்டு வைக்கிறீர்களே, இதை வைத்தால் தமிழர்களுக்கு சோறு கிடைத்துவிடுமா? கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டால் சோறு கிடைத்துவிடுமா?

திருப்பரங்குன்றத்தில் நடப்பது உணவுக்கான போராட்டம் அல்ல; இது உணர்வுக்கான ஒரு போராட்டம் என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ், பாஜக மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது என வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். திமுக, திருமாவளவன், வெங்கடேசன் போன்றவர்கள் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அவர்களை ஆதரிப்பது போல் செயல்படுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து வெங்கடேசன் எம்பி இதுவரை திருப்பரங்குன்றம் மக்களை நேரடியாக சந்தித்து பேசவில்லை. இவர்களுக்கெல்லாம் 12 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் ஓட்டு தான் முக்கியம், 88 சதவீதம் உள்ள இந்துக்களின் ஓட்டுக்கள் தேவை இல்லை என நினைக்கிறார்கள்.

இருக்கின்ற சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விஜய்க்கு சென்று விடும் என்பதால் திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து திமுக கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT