இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
மதுரை: திமுக அரசுக்கு முருக பக்தர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிரிழந்த பூர்ண சந்திரனின் 16-ம் நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்று பூர்ண சந்திரன் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன் தியாகம் செய்துள்ளார். அவர் முருகனுக்காக தனது உடலையே தீபமாக எரித்துக் கொண்டுள்ளார். பூர்ண சந்திரன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும்.
உயிரிழந்த பூர்ண சந்திரன் தவறு செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை.
கடவுள் இல்லை என்று கூறிய ஈவெரா சிலை முன்பு தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அவரது தியாகம் வீண் போகாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் அரசு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றத் தவறினால் இந்து முன்னணியும், முருக பக்தர்களும், பொதுமக்களும் இணைந்து மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்.
திமுக அரசுக்கு முருக பக்தர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். திருமாவளவனும், மதுரை எம்.பி. வெங்கடேசனும் நக்சலைட் சிந்தனை கொண்டவர்கள்.
இந்து கோயில்கள், இந்து கடவுள்கள், இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் அவதூறாகப் பேசியுள்ளார். இதேபோல கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை திருமாவளவன் பேசவில்லை. திமுக எம்பி கனிமொழியும் முருக பக்தர்களை கொச்சைப்படுத்தி வருகிறார். இவர்களுக்கு முருக பக்தர்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.