தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பிறகு இருந்த 12 முதல்வர்களில் மிகவும் மோசமானவர் மு.க.ஸ்டாலின். அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமகவின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி முன்னிலையில், இளைஞரணி தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க உறுதியேற்போம். திமுக ஆட்சியின் மீதான ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணையம் அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் இல்லாத தமிழகம் அமைக்க திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க கூடாது. அதற்காகத்தான் தமிழகம் முழுவதும் திமுகவின் அவல ஆட்சியை அம்பலப்படுத்தினேன். பணத்தை மட்டுமே நம்பி திமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. இளைஞர்களால் எத்தனையோ நாடுகளில் பல புரட்சிகள் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு புரட்சி நடக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாம் இணைந்திருக்கிறோம். குறைந்தது 200 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. திமுக ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெறும்.
அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்துள்ளார். திமுக ஏதாவது ஒரு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு கொண்டிருக்கிறார். உங்கள் கனவை சொல்லுங்கள் என்று ஒரு திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பாமகவினர் அனைவரும், அந்த இணையதளத்திற்கு உள்ளே சென்று உங்கள் மனதில் என்னென்ன தோன்றுகிறதோ அதை கட்டாயம் பதிவிடுங்கள். கெட்ட வார்த்தையை பதிவிட வேண்டாம்.
நம்ம கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம்முடைய வெற்றி தான் திமுகவுக்கு தோல்வியாக மாறும். ராமதாஸை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. ராமதாஸிடம் தொடர்ந்து பொய்யாக சொல்லி, அவரது மனதை மாற்றுகிறார்கள். தமிழகத்தில் அமைச்சர்கள் என்ற போர்வையில் சில வியாபாரிகள் இருக்கிறார்கள். எ.வ.வேலு அமைச்சர் கிடையாது. அவர் ஒரு வியாபாரி. இன்னும் இரண்டு மாதத்தில் அவர் கம்பி என்ன போகிறார். கிராமங்கள் அளவில் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்க, பணத்தை கொண்டு சென்று பத்திரமாக பதுக்கி விட்டனர். அமைச்சர் எ.வ.வேலு போலவே இன்னும் நான்கு வியாபாரிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை அறிக்கை அனுப்பியும் திமுக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் மிதப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் சுதந்திரத்துக்கு பிறகு 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். அவர்களில் மிக மிக மோசமான முதல்வர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான். திமுக ஆட்சியை பார்த்து இன்றைக்கு மக்கள் மட்டும் அல்ல, அவர்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளே கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ய போவது கிடையாது. அவர்களே தோற்கடித்து விடுவார்கள். தமிழக தேர்தல் களம், அதிமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இனிமேல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.