

“ஆட்சி அதிகாரத்தில் மதிமுக ஒரு போதும் பங்கு கேட்டதில்லை; இனியும் கேட்க மாட்டோம்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்கூட்டியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாலும் இம்முறை 12 தொகுதிகளை திமுக-விடம் கேட்டுப் பெற்றாக வேண்டும் என்பதில் மதிமுக-வினர் மல்லுக்கட்டுக்கும் தயாராய் இருக்கிறார்கள்.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சங்கமித்த மதிமுக-வுக்கு, ஒரு தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கியது திமுக. அதன்படி, 2019-ல் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற வைகோ, 2025 ஜூலையில் ஓய்வு பெற்றார். "ஐயாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்" என மதிமுக தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், மகன் துரை
வைகோவுக்கு ஏற்கெனவே எம்பி சீட் கொடுக்கப்பட்டு விட்டதைச் சுட்டிக்காட்டி வைகோவை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப திமுக மறுத்துவிட்டது.
வைகோவுக்கு மறுத்துவிட்டு அந்த இடத்தை கமல்ஹாசனுக்கு கொடுத்ததில் பம்பரம் பார்ட்டிகளுக்கு தாங்கமுடியாத வருத்தம்தான். இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு ஈரோடு பொதுக்குழுவில் பேசிய மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ், "ராமன் வனவாசம் சென்றதால் தான் பரதனுக்குப் பட்டாபிஷேகமே நடந்தது" என ஸ்டாலினைச் சீண்டினார். இதற்கு தனது செய்கையால் பதில் சொன்ன திமுக, வைகோவின் வலதுகரமான முத்துரத்தினம் உள்ளிட்ட மதிமுக-வினரை அறிவாலயத்துக்கு அழைத்துக் கொண்டது.
அடுத்ததாக மல்லை சத்யாவும் தனது சகாக்களுடன் திமுக பக்கம் தாவப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்கு வேறுவிதமாக செக் வைத்து தாவலை மாற்றுவழியில் திருப்பி விட்டார் வைகோ. கூடவே, மதிமுக நிர்வாகக் குழுவைக் கூட்டி, 'இந்துத்துவ சக்திகளை முறியடிக்க 2026-லும் திமுக கூட்டணியே தொடரும்' எனத் தீர்மானம் நிறைவேற்றினார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக 12 தொகுதிகளைக் கேட்க மதிமுக தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசிய தாயகப் புள்ளிகள், "2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றோம். இந்த முறை, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதில் நிர்வாகிகள் கடும் அப்செட். சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'நமக்கு ராஜ்ய சபா சீட் தரப்படாததால் இம்முறை 12 இடங்களைக் கேட்க வேண்டும்' என மாவட்டச் செயலாளர்கள் கண்டிப்புடன் பேசினார்கள். வைகோவும் 'திமுக குழு அமைத்ததும் பேசுவோம்' எனச் சொல்லி இருக்கிறார்.
இதனிடையே தனிப்பட்ட முறையில் துரை வைகோ எடுத்த சர்வேயில் வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 தொகுதிகளில் மதிமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த 12 தொகுதிகளை தரவேண்டும் அல்லது கடந்த முறையைப் போலவே 6 இடங்களை ஒதுக்குவதுடன் ஏப்ரலில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் ஒன்றையும் பொதுச்செயலாளருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என திமுக-விடம் கேட்பதாக இருக்கிறது தலைமை” என்றனர்.