போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.
போடி: வட மாநிலங்களில் உரிய ஆவணங்களின்றி ஏலக்காய் விற்பனை செய்ததன் மூலம், போடி திமுக நிர்வாகி ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் போடி நகராட்சித் தலைவராக இருப்பவர் ராஜ ராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர். திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வர்த்தக நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வட மாநிலங்களுக்கு பல டன் ஏலக்காய் அனுப்பியதில் வரி ஏய்ப்புச் செய்ததாக சங்கர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 6-ம் தேதி அவருக்குச் சொந்தமான கிடங்கு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை, வருமானம் மற்றும் வணிகவரித் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றன. தொடர்ந்து, சங்கர், ராஜ ராஜேஸ்வரி, அவர்களதுமகன் லோகேஷ் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சங்கருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள தனியார் பள்ளித் தாளாளர் வேதாஜெயராஜ், கவுன்சிலர் முருகேசன், முன்னாள் நகராட்சி தலைவரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான பழனிராஜன், சங்கரின் கார் ஓட்டுநர் வடிவேலு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 7 மாதங்களில் நடந்த வங்கிப் பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம், ஏலக்காய்கள் அனுப்பப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டவிவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இதற்கான ஆவணங்களும், சாட்சிகளும் சரியாக இருப்பதால் விரைவில் கைது நடவடிக்கை இருக்கலாம் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.