தமிழகம்

இறங்கி வந்த திமுக.. முறுக்கிக் கொள்ளும் காங்கிரஸ்! - இழுபறி சிக்கலை தீர்க்குமா சிதம்பரத்தின் மூவ்?

செய்திப்பிரிவு

திமுக - காங்கிரஸ் இடையே பேச்சு​வார்த்​தையில் முன்னேற்றம் இருந்​தாலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனைச் சரிசெய்ய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தீவிர முயற்​சியில் இறங்கி​யுள்​ளார்.

திமுக தனது நிலையில் இருந்து இறங்கி வந்து 29 தொகுதிகள் 2 ராஜ்யசபா சீட்டுகள் கொடுக்க முன்வந்​துள்ளது. எனினும், காங்கிரஸ் தலைமை 35 தொகுதி​களைப் பெறுவதில் உறுதியாக உள்ளதால் கூட்டணி நீடிக்குமா என்ற பரபரப்பு ஏற்பட்​டுள்ளது.

          

தமிழகத்தில் விரைவில் சட்டப்​பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக​விடம் 40 இடங்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியதால் கூட்ட​ணிக்குள் சர்ச்சை வெடித்தது. கூடவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரின் கருத்​துக்கள் திமுக​வினரை கடும் கொதிப்​படையச் செய்தன.

இதையடுத்து, ராகுல் காந்தியைச் சந்தித்து திமுக துணைப் பொதுச்​செய​லாளர் கனிமொழி பேச்சு​வார்த்தை நடத்தி​னார். அப்போது ராகுல் 40 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்​த​தால், எந்த முடிவும் எட்டப்​பட​வில்லை. இதன் பின்னரே, விவகாரத்தை சோனியா காந்தியின் கவனத்​திற்குக் கொண்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

சோனியா தலையிட்ட பிறகு, காங்கிரஸ் பொதுச்​செய​லாளர் கே.சி. வேணுகோபால் தமிழகம் வந்து முதல்​வரைச் சந்தித்​தார். அப்போது ஸ்டாலின், “கடந்த தேர்தலைப் போல 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்​கப்​படும்” எனத் திட்ட​வட்​ட​மாகத் தெரிவித்த தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்​தியது.

அடுத்​தகட்டமாக நடந்த கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்​பிலும் முன்னேற்றம் ஏற்பட​வில்லை. “மார்ச் 3-ம் தேதிக்குள் முடிவைச் சொல்லுங்கள்” என திமுக தரப்பில் கெடு விதிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​பட்​ட​தால், கூட்ட​ணிக்குள் மோதல் முற்றத் தொடங்​கியது. இந்த இக்கட்டான சூழலில்​தான், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ப.சிதம்பரம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்​டார்.

இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து சத்தி​யமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகை​யில், “திமுக​வுடனான பேச்சு​வார்த்தை முடங்​கிய​தால், நேற்று முன்தினம் எம்.பி. மற்றும் எம்.எல்​.ஏ-க்​களுடன் வேணுகோ​பாலும், கிரிஷ் சோடங்​கரும் ஆலோசனை நடத்தினர்.

அதில் 80 சதவீதத்​திற்கும் அதிகமானோர் திமுக​வுடன் கூட்டணி வைப்பதே சரி எனத் தெரிவித்​துள்​ளனர். இந்தத் தகவலை ராகுல் காந்தி​யிடம் சொன்ன​போது, ‘கூடுதல் இடங்கள் இல்லாமல் திமுக​வுடன் பயணிப்பது எப்படிச் சரியாக இருக்​கும்?’ எனக் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் ‘தவெக’வுடன் (விஜய் கட்சி) காங்கிரஸ் கூட்ட​ணிக்குச் செல்லப் போகிறது எனத் தகவல் பரவியது. ராகுல் காந்தி ஹைதராபாத் நிகழ்ச்​சியில் இருந்த அந்த நேரத்​தில், நிலைமை மோசமாவதை உணர்ந்த ப.சிதம்​பரம், சோனியா காந்தியைத் தொடர்பு கொண்டு பேசியுள்​ளார்.

‘திமுக கூட்ட​ணியில் நீடிப்பதே காங்கிரஸுக்குச் சரியான முடிவு. விஜய்க்கு எவ்வளவு பலம் இருக்​கிறது என்பது இன்னும் நிரூபண​மாக​வில்லை’ என்று எடுத்​துரைத்​தவர், ‘நானே நேரில் சென்று முதல்​வரைச் சந்தித்துச் சிக்கலைத் தீர்க்​கிறேன்’ எனச் சொல்லி சோனியாவின் சம்மதத்தைப் பெற்றுள்​ளார்.

இதன்படியே முதல்வரை நேற்று சந்தித்த சிதம்​பரம், மிகவும் நிதான​மாகவும் அதேசமயம் அழுத்​த​மாகவும் தனது கருத்​துக்​களைப் பதிவு செய்துள்​ளார். “மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டா​யத்தில் நாம் இருக்​கி​றோம். இந்தச் சூழலில் மதச்சார்பற்ற சக்திகள் சிதறுவது எதிரிக்குக் கொடுக்கும் வாய்ப்​பாகி​விடும்.

கடந்த காலங்​களில் கருணாநிதி அவர்களுடன் இணைந்து நாங்கள் பயணித்த அதே தோழமையைத் தொடர விரும்​பு​கி​றோம். சில தொகுதி​களுக்காக இந்தக் கூட்டணி உடைவது தேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​தும்” என அவர் வலியுறுத்​தி​யுள்​ளார்.

மூத்த தலைவரே தேடி வந்ததால், இடங்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு அதிகரிக்க முதல்வர் சம்மதம் தெரிவித்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இந்த முன்னேற்​றத்தைத் டெல்லிக்குக் கொண்டு சென்றுள்ளார் சிதம்​பரம். தற்போதைய நிலவரப்படி, திமுக 29 தொகுதி​களை​யும், 2 மாநிலங்களவை இடங்களையும் வழங்க முன்வந்​துள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைமை, ‘மாநிலங்களவை சீட் வேண்டாம், 35 தொகுதி​களைத் தாருங்கள்’ எனக் கேட்டுள்ளது. எப்படியும் விரைவில் இதற்கு ஒரு முடிவு எட்டப்​பட்​டு​விடும். அது என்ன முடிவு என்பதும் தெரிந்​து​விடும்” என்கின்​றனர்.

முதல்வரை சந்தித்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்​பெருந்தகை கூறுகை​யில், “முதல்வரை மரியாதை நிமித்​த​மாகவே சந்தித்​தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்​கிறது. திமுக எந்தக் கெடுவும் விதிக்​க​வில்லை. பேச்​சு​வார்த்தை சுமூகமாக நடந்து வரு​கிறது; இடங்கள் குறித்து விரைவில் அறி​விப்​போம்” என்​றார்.

SCROLL FOR NEXT