அசோக் நகர் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: பொதுமக்களுக்கு 6 அம்ச வாக்குறுதிகள் அளித்து தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் நேற்று அசோக் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருக்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது ஆறு வாக்குறுதிகள் அளித்து அவர் பேசியதாவது: தி.நகர் பேருந்து நிலையம் நவீன வணிக வளாகத்துடன் அடுக்குமாடி பார்க்கிங் வசதியுடன் புதுப்பிக்கப்படும்.
கோடைகாலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மற்றும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையமும், திறன் வளர்ப்பு மையமும், வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையமும் ஏற்படுத்தப்படும்.
மழைநீர் வடிகால் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு மழை நீர் தேங்கா வண்ணம் சீரமைக்கப்படும். மேற்கு மாம்பலம் பகுதியில் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வண்ணம் மருத்துவ மையமும் இலவச டயாலிசிஸ் மையமும், அமைக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மிக்க தி.நகரில் நெரிசலை கட்டுப்படுத்த நவீன முறையில் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகன பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படும். 2-வது முறையாக திமுக ஆட்சி அமைந்ததும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், கடந்த 5 ஆண்டு காலதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அரசு நலத்திட்டங்களையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.
இப்பிரச்சாரத்தில் பகுதி செயலாளர்கள் கே. ஏழுமலை, கோ. சு. மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். பழனி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெ. ஜானகிராமன், ஜி.டி. அம்பேத், வட்ட செயலாளர்கள் ஆர்.லோகு, மு. செல்வகுமார், பகுதி துணை செயலாளர் வி.பி.எஸ். ஜனார்த்தனன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.