மதிமுக பொதுசெயலர் வைகோ |கோப்புப் படம்
திருநெல்வேலி: “திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது” என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின்போது நகை, பட்டாடைகள் அணிவிக்கப்பட்டது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தற்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தியது குறித்து யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. உலகப் பணக்காரர்கள் நடத்தும் திருமணத்தைப் போல கிரீஸ் நாட்டில் சென்று திருமணம் நடத்தியதில் என்ன நியாயம்?
தவறை தவறு என்று சொல்வதற்கு வைகோ ஒருபோதும் தயங்கமாட்டார். 1991-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பல ஆயிரக்கணக்கான குற்றங்கள் நடைபெற்றுள்ளன.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் கூடுதல் நிவாரணம் முதல்வர் விஜய் மூலம் வழங்கப்பட உள்ளது. அனில் அகர்வால் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி முதல்வர் விஜய்யை சந்திக்க முயன்றார். அவரைச் சந்திக்க கூடாது என்று முதல்வரிடம் நான் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்று அனில் அகர்வாலை முதல்வர் சந்திக்கவில்லை.
லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் பணம் கிடைப்பது நின்றுவிட்டது.
6 மாதங்கள் தான் இந்த ஆட்சி நீடிக்கும் என்று முன்னாள் முதல்வர் ஒருவர் கூறுகிறார். அதையும் மீறி தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 தொகுதிகளில் வெற்றி பெறுவார்.
விஜய்க்கு ஆதரவாக வைகோ தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்வார். எத்தனை அபாண்டமான பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவற்றை தூள் தூளாக்க வைகோவும் மதிமுகவும் துணை நிற்கும்.
சிலரின் முட்டாள்தனமான பேச்சுகளுக்குப் பதில் சொல்ல முடியாது. திமுக ஆட்சி ஒருபோதும் வராது, வரவே வராது. திமுகவினர் கோயில்களில் எழுப்பாத அரோகரா முழக்கமா இந்த ஆட்சியில் எழுப்பப்படுகிறது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டுள்ளனர். இதில் என்ன தவறு?” என்று வைகோ கேள்வி எழுப்பினார்.