

பிரதிநிதித்துவப் படம்
சென்னை: “அரசின் தள்ளுபடி சலுகை காலத்தை அறுவடை காலம் வரை நீட்டித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மாசிலாமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது, பிரதமரின் அனுமதியில் கட்டப்படும். மற்ற எவரின் அனுமதியும் தேவையில்லை என நவ.14 கர்நாடகாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையே, கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியது என்பது தமிழகத்துக்கு எதிரான வன்ம அடாவடி போக்காகும்.
எவருடைய அனுமதியும் தேவையில்லை என்று சொன்ன இவர்தான் மேகேதாட்டு அணையை அமைத்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வைத்து ஏன் அனுமதிக்கு காத்திருந்தார்? உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி ஏன் மனு தாக்கல் செய்தார்? கர்நாடகத்தின் அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் டெல்லி சென்று ஏன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்?
கர்நாடகத்தில் அந்த அரசு கட்டுகிற பிற அணைகளை போல் இதை உருவாக்கிட முடியாது என்ற நிலையில் தானே அனுமதி கோரினார்.
2018-ல் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் 15 ஆண்டுகளுக்கு இதில் மாற்றமோ, திருத்த முறையீடோ கூடாது என கூறி இருக்கிறது. தீர்ப்பின் படியான நீரை பங்கீட்டின்படி அந்தந்த மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, பிற மாநிலங்கள் பாதிக்கும் நிலையில் எந்த ஒரு புதிய கட்டுமானமும் கூடாது என நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. இந்த சட்ட வரன் முறைகளை எல்லாம் மீறி கர்நாடக முதல்வர் பேசுவதும், கட்டுமானத்துக்கான நடவடிக்கை எடுப்பது என்பதும் அரசியல் சட்ட மீறலாகும். இந்த நிலையில் மேடையில் இருந்த பிரதமர் இதற்கு விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
பிரதமர் என்பவர் இந்திய நாடு முழுமைக்குமான சட்ட முறைமைகளின் பாதுகாவலர், இந்திய ஒருமைப்பட்டை காக்க வேண்டியவர். எவர் அனுமதியும் தேவையில்லை என அடாவடியாக நீதி நெறி முறைகளுக்குக்கு முரணாக, இரு மாநில நல்லுறவை கெடுத்து, மாநில மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் நிலையில் பிரதமருக்கு முன்னால் பேசுகிற பொழுது, அதற்கு இவர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். இவரின் மவுனம் தான் கர்நாடகத்துக்கு சாதகத்தையும் தமிழகத்திற்கு அச்சத்தையும் தருகிறது.
பெங்களூர் குடிநீருக்காகத் தான் மேகேதாட்டு அணை, இதில் தேக்கி வைக்கப்படும் நீர் தமிழகத்திற்கு தேவையான பொழுது திறந்து விடுவதற்கு சுலபமாக இருக்கும் என கூறி வந்த கர்நாடக முதல்வர் மாண்டியா, மைசூர் மாவட்ட விவசாயிகளின் வேளாண் விரிவாக்கத்திற்கு தான் இது கட்டப்படுகிறது என்று இப்பொழுது கூறுகிறார். உண்மை, பூனை வடிவில் வெளியே வந்து விட்டது.
சொந்த சுயநலனுடன், அரசியல் சட்ட வழிமுறைகளை குலைத்து, மாநிலங்களுக்கிடையே நல்லுறவை கெடுத்திடும். எனவே, இது குறித்து பிரதமர் பேசிட வேண்டும். தமிழக அரசு உடன் அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசை சந்தித்து வலியுறுத்தி தடை செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கடன் தள்ளுபடி: கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகளின் தொடர் போராட்ட நிலையில் தமிழக அரசு பயிர் கடன்களை விவசாயிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த அரசாணையின்படி தள்ளுபடி போக எஞ்சிய தொகையை நவ.31-க்குள் செலுத்தினால் தான் தள்ளுபடி தொகையும், அதற்குரிய வட்டி சலுகை தொகையும் அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டங்கள் தொடர்வதால் எப்படியும் தேர்தல் அறிவிப்பின்படி தள்ளுபடி வரும் என்று நம்பிக்கையில் விவசாயிகள் இருந்ததால் கடன் பெற்ற விவசாயிகள் புதிய கடன் பெற தகுதி இல்லாத சூழலில் வெளியில் கடன் பெற்று சாகுபடி பணிகளை தொடங்கினர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் நிலுவை கடனை திருப்பி செலுத்திட முடியாத சூழலில் நிலுவையில் உள்ள கடன் தொகையை எப்படி செலுத்த முடியும்?
தமிழக அளவில் பரவலாக இது பெரும் பிரச்சினையாக மாறி உள்ளது. எனவே அரசின் தள்ளுபடி சலுகை காலத்தை அறுவடை காலம் வரை நீட்டித்திட வேண்டும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று மாசிலாமணி கூறியுள்ளார்.