நயினார் நாகேந்திரன்
திண்டுக்கல்: “2002-ல் இறந்தவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருந்துள்ளனர். இறந்தவர்களை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (டிச.27) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: திமுக ஆட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியான திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள நீர் நிலைகளில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அர.சக்கரபாணி தொகுதியான ஒட்டன்சத்திரத்தில் ரூ.100 கோடிக்கு நில அபகரிப்பு நடந்துள்ளது.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலேயே கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறது. 70 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் பிடித்துவிடும் அவல நிலை உள்ளது. பக்தியே இல்லாதவர்கள் பழநியில் முருகன் மாநாடு நடத்தினார்கள். ஆனால், மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடந்த முருகன் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்பவர்கள் சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். திமுக ஆட்சியில் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியையே திமுக கூட்டணி கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். எங்கு தவறு நடந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று சொன்ன முதல்வரின் இரும்பு கை துருப்பிடித்து விட்டது.
தமிழக சிறையில் 72 மரணங்கள் நடந்துள்ளது. நாளொன்றுக்கு 6 கொலைகள் வீதம் தற்போது வரை 7500 கொலைகள் நடந்துள்ளன. இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால் நாடு தாங்காது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அதிகாரம் கேட்பதாக தகவல் வருகிறது. பொங்கல் முடிந்ததும் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெறும்.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2002-ல் இறந்தவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருந்துள்ளனர். இறந்தவர்களை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் இருக்கிறது. ஆனால், திமுக அரசு அனைத்து திட்டங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டுவதையே குறிக்கோளாக வைத்துள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் 14 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வர முடிந்ததா? . வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறும். ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்கும் நாள் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது, தமிழக பாஜக பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.