தமிழகம்

வந்தவர்களுக்கே வாய்ப்பளித்தால் நாங்கள் எங்கே போவது? - புலம்பித் தள்ளும் பரம்பரை திமுகவினர்

அ.அருள்தாசன்

‘வெல்லப்போவது நாங்கள் தான்’ என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, மாற்றுக் கட்சிகளில் மனக்கசப்புடன் இருக்கும் நபர்களை எல்லாம் தேடிப் பிடித்து தூக்கி வருகிறது ஆளும் கட்சியான திமுக. இதனால் தங்களுக்கு பலம் சேரும் என தலைமை நினைத்துக் கொண்டிருக்க, இவர்களால் தங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகிறதே என பதை பதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் காலங்காலமாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பரம்பரை திமுக-வினர்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் தங்களின் மனக் குமுறலை கொட்டிவரும் ஒரிஜினல் திமுக-வினர், ‘மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுக-வில் இணையும் விஐபி-க்கள் யாரும் கட்சியை பலப்படுத்த 10 ஆயிரம் பேருடன் வருவதில்லை. மாறாக, தங்களது சொத்தையும், அரசியல் செல்வாக்கையும் பாதுகாத்துக் கொள்ளவே அவர்கள் இங்கு வருகிறார்கள். இதனால் பாரம்பரிய திமுக-வினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் கண்ணெதிரெ நழுவிக் கொண்டிருக்கிறது’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.

          

இதுகுறித்து நம்மிடம் ஆதங்கத்தைக் கொட்டிய சிலர், “தற்போதைய திமுக அமைச்சரவையில் 3-ல் 1 பங்கு பேர் அதிமுக-வில் இருந்து வந்தவர்கள் தான் இருக்கிறார்கள். இப்போது கட்சியில் வரிசையாக வந்து சேர்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெருந்தலைகளுமே தங்களுக்கான தேர்தல் வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டே கட்சி மாறுகிறார்கள். அதிமுக எம்எல்ஏ-வான மனோஜ் பாண்டியனுக்கு அவரது ஆலங்குளம் தொகுதியையே தருவதற்கு திமுக சம்மதித்திருப்பதாகத் தெரிகிறது.

அண்மை வரவான வைத்தியலிங்கத்துக்கும் அவரது ஒரத்தநாடு தொகுதியைக் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அமமுக-வில் இருந்து வந்திருக்கும் ஜமீன்தார் மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதியை தலைமையிடம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி, மற்ற கட்சிகளில் இருந்தவர்களையே ஜெயிக்க வைத்து மந்திரியாக்கினால் காலங்காலமாக கட்சியில் அடிபட்டு மிதிபட்டு கிடப்பவனுக்கு என்றைக்குத்தான் நல்ல காலம் பிறக்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

SCROLL FOR NEXT