சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்ற திமுகவினர்.
சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, திமுக நிர்வாகி ஒருவர் 25 ஆயிரம் சாக்லேட்களால் உருவான சுமார் 15 அடி உயர மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
பெரும்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன்.
அதேபோல், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு திட்டங்கள்
‘தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சித்தாலப்பாக்கத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. சித்தாலப்பாக்கத்தை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்து, பாதாள சாக்கடை திட்டம், சாலை மேம்பாட்டு திட்டம், தினமும் குடிநீர் வழங்குதல், மழைநீர் வடிகால் திட்டம் போன்றவை மேற்கொள்ள ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என, மக்களிடம் வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் உறுதியளித்தார். இதேபோல், அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன், பெரும்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ‘‘விடுபட்டவர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இலவச பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என உறுதியளித்தார்.