ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸார் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். படம்: ம.பிரபு

 
தமிழகம்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது: முன்ஜாமீன் மனு தள்ளுபடியால் சிக்கல் - முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடிக்​கும் மேல் மோசடி நடந்​த​தாகக் கூறப்​படும் வழக்​கில், முன்​ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​ததை தொடர்ந்து திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று மாலை கைது செய்​யப்​பட்​டார்.

கடந்த 2021–2026 திமுக ஆட்​சிக் காலத்​தில், தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம், பள்​ளி​களின் தரம் உயர்த்​து​தல் மற்​றும் டிடி​சிபி அனுமதி உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனுமதி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி கோடிக்​கணக்​கான ரூபாய் மோசடி செய்​யப்​பட்​ட​தாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் கூட்​டமைப்​பின் செய​லா​ளர் இளங்​கோவன் புகார் அளித்​திருந்​தார்.

இந்த புகாரின் அடிப்​படை​யில் தமிழ்​நாடு தனியார் பள்​ளி​கள் சங்​கக் கூட்​டமைப்​பின் முன்​னாள் தலை​வரும், திமுக பிர​முகரு​மான பி.டி.அரசகுமார்கைது செய்யப்பட்டார். அவர் 177 தனியார் பள்​ளி​களிடம் இருந்து ரூ.400 கோடிக்​கும் அதி​க​மாகப் பணம் பெற்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்​தது.

இந்த வழக்​கில் முன்​னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அரசகுமார் மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்​குச் சொந்​த​மான 20 வங்​கிக் கணக்​கு​களும், அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பரும், சங்​கத்​தின் மாநில பொருளாள​ரும், முன்​னாள் எம்​எல்ஏ-வுமான முத்​துகுமார் தொடர்​புடைய 29 வங்​கிக் கணக்​கு​களிலும் பணப் பரிமாற்றம் நடந்தது கண்​டறியப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக, அன்​பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை மற்​றும் திருச்​சி​யில் உள்ள அன்​பில் மகேஸின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர். கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அன்​பில் மகேஸிடம் சுமார் 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இந்த வழக்​கில் முக்​கிய நபராகக் கருதப்​படும் முன்​னாள் எம்​எல்ஏ முத்​துகுமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்​ப​தால், அவர் வெளி​நாடு தப்​பிச் செல்​வதைத் தடுக்​கும் வகை​யில் அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் ‘லுக் அவுட்’ நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டு உள்​ளது.

இதைத் தொடர்ந்து முன்​ஜாமீன் கோரி அன்​பில் மகேஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை கடந்த 16-ம் தேதி அன்று நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக நடந்​தது. அப்​போது காவல் துறை தரப்​பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர்.ஜான் சத்​யன், “இது ஒரு நிதி பயங்​கர​வாதம் தொடர்​பான வழக்கு. இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள தனியார் பள்​ளி​கள் சங்க மாநில பொருளாளர் முத்​துக்​குமாரும், அன்​பில் மகேஸும் நெருங்​கிய நண்​பர்​கள். ஒன்​றாகப் படித்​தவர்​கள். முத்​துக்​குமார் தலைமறைவாக உள்​ளார். அவரை அன்​பில் மகேஸ்​தான் பாது​காத்து வரு​கிறார். எனவே, அவருக்கு முன்​ஜாமீன் வழங்​கக் கூடாது” என்று ஆட்​சேபம் தெரி​வித்​தார்.

அன்​பில் மகேஸ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன், “போலீ​ஸார் அன்​பில் மகேஸிடம் 8 மணி நேரத்​துக்​கும் மேலாக விசா​ரணை நடத்தி உள்​ளனர். மீண்​டும் விசா​ரணைக்கு அழைத்​தால் ஆஜராகத் தயாராக உள்​ளார். எனவே, முன்​ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று கோரினார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்​திருந்​தார்.

நீதிபதி உத்தரவு: இந்​நிலை​யில், அன்​பில் மகேஸ் முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் நேற்று தீர்ப்​பளித்​தார். அந்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு தரப்​பில் 177 பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.400 கோடி வரை கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்​கப்​பட்ட தொகை இறுதி​யாக யாரிடம் சென்​றுள்​ளது என்​பதை கண்​டறிய அன்​பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிப்​பது அவ​சி​யம் என்​றும் அரசு தரப்​பில் வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அரசி​யல் செல்​வாக்கு மிக்க நபர்​கள் தொடர்​புடைய வழக்​கு​களில் விசா​ரணை​யின் ஆரம்ப கட்​டத்​திலேயே முன்​ஜாமீன் வழங்​கினால் அது புலன் விசா​ரணை​யைப் பாதிக்​கும். தலைமறைவாகவுள்ள முத்​துக்​குமாரை பிடிக்க வேண்​டிய கட்​டாயத்​தில், அவருடன் தொடர்​புடைய அன்​பில் மகேஸுக்​கும் முன்​ஜாமீன் வழங்​கு​வது ஏற்​புடைய​தாக இருக்​காது. இவ்​வாறு நீதிபதி தெரி​வித்​துள்​ளார்.

தனது முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மதி​யம் அமைந்​தகரை நெல்​சன் மாணிக்​கம் சாலை​யில் உள்ள வழக்​கறிஞர் வில்​சனின் அலு​வல​கத்​துக்​குச் சென்ற அன்​பில் மகேஸ், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​வது தொடர்​பாக அவரிடம் ஆலோ​சனை நடத்​தினார்.

ஆலோ​சனை நடத்தி விட்டு வெளியே வந்த போது, சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

பின்​னர் வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பி​ரிவு அலு​வல​கத்​தில் வைத்து அன்​பில் மகேஸிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று மருத்​து​வப் பரிசோதனை செய்​தனர். பின்​னர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில், நீதிபதி எல்.எஸ்.சத்​யமூர்த்தி முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தினர்.

சட்டப்படி எதிர்கொள்வேன்: அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம்’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT