திமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சீர்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனைச் சரி செய்ய, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்திற்கான கல்வி நிதி, 100 நாள் வேலைத் திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எதனையும் ஒதுக்காமல் தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வைகோ, காதர் மொகிதீன், செல்வப்பெருந்தகை, வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா, எல்.சுதீஷ், கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, “சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனே போக்க வேண்டும், தமிழகத்திற்கான நிதியைக் குறைக்காதே” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில், “மத்திய அரசின் மக்கள் விரோத எண்ணங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில், நமது கூட்டணியின் வலிமையால் தமிழகத்திற்குள் பாஜகவை நுழைய விடமாட்டோம் என சபதமேற்போம்” என்றார்.
திருமாவளவன் பேசுகையில், “காந்தியின் மீது பாஜகவுக்குத் தீராத வெறுப்பு இருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தை (125 நாட்கள் வேலை) உறுதி செய்து நிதி ஒதுக்க வேண்டும்” என்றார். கே.பாலகிருஷ்ணன், “கடந்த 20 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்தத் திட்டத்திற்கு, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாவுமணி அடித்து விட்டார்கள்” என்றார்.
உடனே சீர் செய்ய வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. மக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்ய முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.