இப்படிப்பட்ட அநாகரீகமான ஆளுநரை தமிழக சட்டப்பேரவை இதுவரை கண்டதில்லை என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சிறு குழந்தைகள் அடம்பிடிப்பது போல சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முன்கூட்டியே பாட வேண்டும் என சிறுபிள்ளைத்தனமாக ஆளுநர் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவையின் மரபை மாற்றக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? எதற்காக மரபுகளை மாற்ற துடிக்கிறார்கள்? சட்டப்பேரவையில் ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை.
ஆனால் ஆஃப் செய்யப்பட்டதாக பொய் சொல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட அநாகரீகமான ஆளுநரை தமிழகமும், தமிழக சட்டப்பேரவையும் இதுவரை கண்டதில்லை. ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜகவின் உண்மை முகத்துக்கு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்.
விசிக சட்டப்பேரவை குழு தலைவர் சிந்தனை செல்வன்: தமிழர்கள் தேசிய கீதத்தை பாட மறுப்பதாக அவதூறு பிரச்சாரத்தை ஆளுநர் தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழர்கள் மீது தேசிய அளவில் வன்மத்தை கக்கும் வகையில் பழி சுமத்தி, பொய்யான பிம்பத்தை உருவாக்குகிறார். இது அரசியல் தளத்தில் நாகரீகமானது அல்ல. இந்த அச்சுறுத்தல்களுக்கு தமிழகம் ஒரு போதும் அடிபணியாது.
மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி: சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் அப்படியே படிக்க வேண்டும். அதில் கருத்து சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. விளையாட்டுத் தனமாக சட்டப்பேரவையை, அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயலை ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். பாஜகவின் பிரச்சார ஊழியராக நடந்து கொண்டிருக்கிறார். சட்டத்துக்கு உட்பட்ட நடைமுறையை ஆளுநர் பின்பற்ற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்: ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவரும் சட்டப்பேரவை மரபுகளை மீறி, ஆளுநர் உரையை படிக்காமல் அவர் வெளியேறி இருப்பது பேரவை மாண்புகளை மீறுவதாகும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். அவரை உடனடியாக குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும்.