இடது: இன்பதுரை | வலது: வில்சன்
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர், தங்களது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருப்பதற்கு திமுக எம்.பி வில்சன் மற்றும் அதிமுக எம்.பி இன்பதுரை ஆகியோர் கடும் எதிர்வினையாற்றியுள்ளனர்.
இது குறித்து திமுக எம்.பி வில்சன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 21 நாட்களுக்குள், கட்சித் தாவல் புகாரில் சிக்கிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில், அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த உடனேயே தலைமைச் செயலக வளாகத்திலேயே தவெகவில் இணைந்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தையும், அங்குள்ள அதிகாரப்பூர்வ அறைகளையும் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்த மூன்று தொகுதிகளையும் சார்ந்த மக்கள் மீது தற்போது தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆறு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய மற்றொரு இடைத்தேர்தலுக்காக, கணிசமான அளவிலான பொதுமக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்!” என்று தெரிவித்துள்ளார்.