

சென்னை: வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மூன்று பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜினாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதிமுக ஏற்கெனவே இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கும் நிலையில், வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலியாகும் தொகுதிகள்:
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறையும். ஏற்கெனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில், இந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டால் 4 தொகுதிகள் காலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.