சென்னை: ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு ஊழியர்களுக்கான முழுமையான பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலிக்கப்படும், அரசு பணியாளர்களுக்கு நலவாரியம். தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப்பணி என தவெக சார்பில் தேர்தலில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்களை கடந்த நிலையிலும் தங்களின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகாததால் தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் வெளிப்பாடாக, டாஸ்மாக் பணியாளர்கள் காலமுறை போராட்டத்தை அறிவித்து பின்னர் அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதில் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை மீதான மானிய கோரிக்கையில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை ஒரு புறமிருக்க போக்குவரத்து தொழிலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல், அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொமுச, சிஐடியு ஆகிய சங்கங்கள் 25 சதவீத ஊதிய உயர்வை கோரின. இதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கியது. இதற்கு சிஐடியு உள்பட பல சங்கங்கள் உடன்படவில்லை.
அதேபோல், கடந்த 2025-ம் ஆண்டு 15-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி மே.9-ம் தேதி 6 சதவீத உயர்வை அறிவித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசு அதனை 4 ஆண்டாக அதிகரித்தது. தற்போது 16-வது ஊதிய ஒப்பந்தம் செப்.1-ம் தேதி 2027ம் ஆண்டு நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில் விரைவில் பண்டிகை நாட்கள் வரவுள்ளதால் மற்ற தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் திமுக மற்றும் அதிமுக தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் அரசுக்கு அது நெருக்கடியை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.