தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரிடம் நேற்று மனு அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன். (அடுத்த படம்) ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி.
சென்னை: குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகரிடம் திமுக, அதிமுக சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) - தலா 2 மற்றும் அதிமுகவில் இருந்து 25 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றது.
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் பங்கேற்று, கூட்டணியிலும் இணைந்துள்ளன. அமைச்சரவை மற்றும் கூட்டணியில் இடம்பெற மறுத்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறிவருகின்றன. இந்த நிலையில், தவெக பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார்.இந்த சூழலில், அதிமுகவில் இருந்து இதுவரை 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
இதேபோல, திமுக எம்எல்ஏக்களிடமும் தவெக நிர்வாகிகள் குதிரை பேரம் நடத்துவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன் எம்.பி., நிர்வாகிகள் ஆஸ்டின், இ.பரந்தாமன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை, தவெகவில் இணையுமாறு காவல் துறை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவியும், சீனிவாசனுக்கு ரூ.50 கோடியும் தருவதாக குதிரை பேரம் பேசியுள்ளனர்.
முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் காவல் துறையினரையே பிடித்துத் தள்ளுகின்றனர். தமிழக அரசியலின் மாண்பைச் சிதைக்கும் தவெகவின் இத்தகைய செயல்கள் குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.
அரசுடன் தொடர்பு இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர். இதுகுறித்து ஆளுநரிடம் முறையிட்டபோது, ‘‘அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்களையும் முதல்வர் அமைச்சர்கள் ஆக்கி இருக்கலாமே’’ என்று ஆளுநரே தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இவர்களைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி. ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் மனு கொடுத்தோம். ஆளுநர்தனக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், எங்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.
இன்பதுரை கூறியபோது, ‘‘அதிமுகவினர் தங்கியிருந்த ஒரு இடத்துக்கு முதல்வரே சென்று, சில வாக்குறுதிகளை அளித்ததாக தெரிகிறது. தன்பிறகுதான், 4 அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகி, தவெகவில் இணைந்துள்ளனர். தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக 21 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கடிதம் அளித்து,மன்னிப்பை பெற்ற பிறகு, 2 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இதில் குதிரை பேரம் நடந்துள்ளது. இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.