சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது டிஜிபி அலுவலகத்தில் திமுக, அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்து வருகிறார். இந்நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘‘கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நேரிலும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவலாக வெளியாகி உள்ளன.
மேலும் மாவட்ட ஆட்சியரின் கணவர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, அருள் விக்னேஷ் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்குக் குறையாத பெண் அதிகாரியின் தலைமையிலும், தங்கள் அலுவலக நேரடிக் கண்காணிப்பிலும் விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக புகார் மனு: அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த திரிசூலி, தமிழக அரசு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “ கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசகுறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அவரது இல்லத்துக்குள்ளும் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தவெகஎம்எல்ஏ மீது உடனடியாக எப்ஐஆர்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.