வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும் 5.77 கோடி வாக்காளர்கள்

டிச.11 வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும் 5.77 கோடி வாக்காளர்கள்
Updated on: 
2 min read

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் படி, தமிழகம் முழுவதும் தற்போது 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

சென்னையில் மாவட்டதேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ்.சமீரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 82 லட்சத்து 3,992 பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 95 லட்சத்து 34,734 பேர், 3-ம் பாலினத்தவர்கள் 7,892 பேர் என மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 46,618 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதமிழகத்தில் 5 கோடியே 73லட்சத்து 43,291 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 4 லட்சத்து 3,327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 77 லட்சத்து 46,618 வாக்காளர்கள் இடம்பெற்றனர். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 39,301 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் 29 லட்சத்து 14,908 வாக்காளர்கள், சேலம் மாவட்டத்தில் 27 லட்சத்து 95,315 வாக்காளர்கள், கோவை மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 68,820 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைவான வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் (5,29,528) உள்ளது தொகுதிகள் அடிப்படையில் சோழிங்கநல்லூர் (5,58,729), ஆவடி (4,39,953), மாதவரம் (4,37,465) ஆகியவை அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளாகவும், துறைமுகம் (1,20,852), எழும்பூர் (1,39,732), வில்லிவாக்கம் (1,64,527) ஆகியவை குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளாகவும் உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியல்களை https://elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 21, 22, 29 ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கேயே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வரும் டிசம்பர் 11-ம் தேதிக்குள் படிவங்களை வழங்கலாம். பெயர்சேர்த்தலுக்கான படிவத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். முகவரிக்கான சான்றாக நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கலாம். இத்தகவலை மாநில தலைமைத் தேர்தல்அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும் 5.77 கோடி வாக்காளர்கள்
மதுரை நகைக்கடையில் துணிகரம்: ரூ.50 கோடி மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

X