சென்னை: "திருத்தணியில் புடவை வணிகர் மீது போதையில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. மது, கஞ்சா போதையில் தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழித்ததே திமுகவின் சாதனை" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தில் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே.
சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.
திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.