

சென்னை: “‘தமிழகத்தில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
‘தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை’ என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு (மா.சுப்பிரமணியம்), ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் - ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும். 2026, திமுக ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.