தமிழகம்

“ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்” - பிரேமலதா விஜயகாந்த் தகவல்

செய்திப்பிரிவு

ஜன.9-ம் தேதி கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் பொங்கலுக்கு பின் தமிழகத்தின் அரசியலுக்கு நல்ல வழிபிறக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: விஜய பிரபாகரன், விமானம் தாமதம் காரணமாக இங்கு வரவில்லை. உரிய நேரத்தில் விருப்ப மனு விநியோகம் குறித்து அறிவிப்போம். கேப்டன் குருபூஜைக்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. உள்ளம் தேடி, இல்லம் நாடி பிரச்சாரப் பயணம் வெற்றிகரமாக 3 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பிஎல்ஏ-2 படிவங்களுக்கான பணிகள் முடித்து தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டுக்காக தேமுதிக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். மாநாட்டில் ஒரு நல்ல அறிவிப்பு கிடைக்கும். தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல பொங்கலுக்குப் பின்னர் தமிழகத்தின் அரசியலுக்கும் நல்ல வழி பிறக்கும்.

தேமுதிக நிர்வாகிகள் உடன் தேர்தலுக்கான ஆலோசனைகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. நிர்வாகிகள் உடன் தினமும் பேசி வருகிறோம். கேப்டன் காலத்தில் இருந்தே தேமுதிக-வுக்கு மாநிலக் கட்சிகளும், மத்தியில் உள்ள கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். தேமுதிக-வோடு அனைவரும் தோழமையோடும் நட்போடும் உள்ளனர். கூட்டணி குறித்தோ, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து உரியநேரத்தில் நல்ல தகவலை அளிப்போம்.

கடலூர் மாநாட்டுக்குள் கூட்டணி குறித்துநல்ல முடிவு வரும். யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஜனவரி 9-ம் தேதி தெரிவிக்கப்படும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் எங்களுக்கு இலக்குதான். என்றாலும் அதிகாரபூர்வமாக தேமுதிக-வுடன் இதுவரை யாரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT