தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் பேசினார்.
“அதிமுக-வை விமர்சித்ததால் அண்ணாமலைக்கு தேர்தலில் சீட் வழங்காமல் பாஜக-வில் ஓரம்கட்டிவிட்டார்கள்” என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்றாலும் அவர் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். கன்னடர்களும் தமிழர்களும் ஒரே தாயின் பிள்ளைகள் போன்றவர்கள். மொழியாலும் எல்லைகளாலும் நாம் பிரிந்திருந்தாலும், தென்னிந்தியாவின் உரிமைகளுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இலவச அரிசி திட்டம், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் நலன் என எதற்கும் அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பாஜக-வினர் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களின் இதயங்களை வென்றுள்ள கட்சியாக திமுக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள், பாலங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல வளர்ச்சித் திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது.
குறிப்பாக, தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது போன்ற முக்கிய முடிவுகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ளார். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர 20 கட்சிகள் அடங்கிய கூட்டணிக் கட்சிகள் ஒரு குடும்பமாகச் செயல்படுகின்றன. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் பணியைவிட்டு விலகி பாஜக-வில் இணைந்தார்.
அதிமுக-வை அவர் விமர்சனம் செய்ததற்காக தற்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்காமல் பாஜக-வில் ஓரங்கட்டிவிட்டார்கள். பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் எங்களது கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. பெங்களூருவில் உருவான இண்டியா கூட்டணி நாடு முழுவதும் வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.