கோப்புப் படம்
சென்னை: தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து மாசற்ற, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.