தமிழகம்

சிவகாசி உள்பட பல்வேறு ஊர்களில் தயாரான தீபாவளி பட்டாசுகள் விற்பனை ரூ.7000 கோடியை தாண்டியது

செய்திப்பிரிவு

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு 20 சதவீதம் வரை விலை அதிகரித்த நிலையிலும் சிவகாசி உள்பட விருதுநகரின் பல்வேறு ஊர்களில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும், குறிப்பாக சிவகாசி பகுதியிலும் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று இயங்கும் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுதீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால் உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுதீர்ந்தன.

இதனால் கடந்த ஆண்டு இறுதியிலேயே சிவகாசி பட்டாசு ஆலைகளில் புதிய உற்பத்தி தொடங்கியது. தொடர்விபத்து, ஆய்வு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 300-க்கும் அதிகமான ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

உற்பத்தி பாதிப்பு மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக பட்டாசு விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்தது. விலை உயர்வு இருந்தாலும், இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7 ஆயிரம் கோடியை கடந்துள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் 90 சதவீதம் வட மாநிலங்களிலும், 10 சதவீதம் தமிழகத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மொத்த உற்பத்தியில் 80 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகின. ஆனாலும் 20 சதவீதத்திற்கும் மேல் விலை உயர்வு காரணமாக பட்டாசு வர்த்தகம் ரூ.7 ஆயிரம் கோடியை கடந்தது. இரண்டாம் தலைமுறை பசுமை சரவெடி உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், அடுத்த ஆண்டு பட்டாசு விற்பனை மேலும் அதிகரிக்கும்'என்று கூறினர்.

ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு: சிவகாசி தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில்,' அடுத்த ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட, தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT