சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் சிறப்பு தீக்காய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு 25 படுக்கைகளுடன் சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மற்ற அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டுகள் அல்லது சிகிச்சை மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தீபாவளி அன்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் ஒவ்வொருதுறையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். குறிப்பாக, தீக்காய சிகிச்சை, சாலை விபத்துகளுக்கான சிகிச்சை, காய்ச்சல் மற்றும் அவசர கால சிகிச்சை மையம் தயாராக இருக்க வேண்டும். உயிரிழப்பு இல்லாத தீபாவளியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.