சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்ட அறிக்கையில், ‘போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் உத்தரவின்படி 1.06 லட்சம் பணியாளர்களுக்கு ரூ.167.12 கோடி போனஸ், கருணைத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நவ.2-ம் தேதி (நேற்று) வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
இதேபோல கூட்டுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும். உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் 10% போனஸ், கருணைத் தொகை தரப்படும்.
குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு நிகர லாபம் ஈட்டும், போனஸ் சட்டத்தின்கீழ் வராத கூட்டுறவு நிறுவனங்களில் 20% வரை போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின்கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமை மற்றும் மத்திய கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3,000, தொடக்கக் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் ரூ.49.69 கோடி போனஸ், கருணைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் உபரி உள்ள சுப்ரமணிய சிவா, கள்ளக்குறிச்சி-2 ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 20%, மற்ற 14 கூட்டுறவு, 2 பொதுத்துறை ஆலைகளுக்கு 10% போனஸ் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 5,190 பேர் பயன்பெறுவார்கள்.