

கே.என்.நேரு
புதுடெல்லி: நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்கு பதிய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என். நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஷியாம் திவான் மற்றும் சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி, இந்தப் புகாரை அளித்தவர் அரசியல் எதிரி என்றும், தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவோ, தமது தரப்பு நியாயங்களை முன்வைக்கவோ உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
அதுபோல, அமைச்சராக இருந்த ஒருவரையும், அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களையும் விசாரணையின் தொடக்கத்திலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அணுகி சென்னை உயர் நீதிமன்றம் கருத்துகளைத் தெரிவித்திருப்பது முறையற்றது என்றும் கூறினர்.
அதற்கு நீதிபதிகள், அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஒருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முன்னரே ஏன் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் பல வாதங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏன் முன்வைக்கவில்லை என்றும், அங்கு இந்த வாதங்களை முன்வைக்க அனுமதிக்கவில்லை என்பதற்கான விவரங்களைத் தெரிவிக்குமாறு கூறினர்.
அதற்கு கே.என்.நேரு தரப்பு வழக்கறிஞர்கள், தங்களது தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்கவே சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என மீண்டும் குற்றம்சாட்டினர்.
ஆனால், அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நபர் முக்கியமான அமைச்சகத்திற்குப் பொறுப்பு வகித்தவர் என்பதால், இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிவது மிகவும் அவசியம் என்றும், அதற்காகவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகாமல், உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளீர்கள், அந்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியமான ஆவணங்களின் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் முடிவெடுத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர்.
எனவே, தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கே.என்.நேருவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.