காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டிஎஸ்பி-க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்டதாகக் கூறி, காவல் துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், மாவட்ட நீதிபதிக்கு எதிராக நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் பணியிட மாற்ற குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து செம்மல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.