சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி, தெருமுனைக் கூட்ட பிரச்சாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் சுவிதா (Suvidha) செயலி மூலம் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும்.
இந்த செயலி மூலம் நேற்று காலை 11 மணி நிலவரப்படி, 1,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 724 விண்ணப்பங் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 219 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
214 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. சென்னை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடத்த 112 இடங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்த 179 இடங்கள் என மொத்தம் 291 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.