சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்' வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் வீடு வீடாக சென்று 'பூத் சிலிப்' வழங்கினர்.படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 5.73 கோடி பேருக்கு பூத் சிலிப் விநியோகிக்கும் பணி பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. இப்பணிகளை ஏப்.18-ம் தேதிக்குள் முடிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போது தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 30,658 ஆண், 2 கோடியே 93 லட்சத்து 4,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43,291 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் தேர்தலில் எளிதாக வாக்களிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வாக்காளர் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.
சென்னை மாவட்டத்தில் 975 அமைவிடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளிலும் பூத் சிலிப் விநியோகம் நேற்று தொடங்கியது. இப்பணிகளை ஏப்.18-ம் தேதிக்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகளை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும்போது, அவர்களின் கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விநியோகிக்கப்படாத வாக்காளர் தகவல் சீட்டு அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திருப்பி வழங்கவும், அவற்றை உறையில் பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களின் வசதியை அதிகரிக்கும் நோக்கில், பூத் சிலிப் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாற்றம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் விரைவாக கண்டறியவும் உதவியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத் சிலிப் வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.