சென்னை: தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டாசுக் கழிவுகளைத் தனியாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்ற, பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து அகற்றுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சி சார்பில் பட்டாசுக் கழிவுகளைக் கையாளுதல், அவற்றைத் தனியாகச் சேகரிப்பதன் அவசியம் குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் பட்டாசுக் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வு குரல் பதிவுகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் பட்டாசுக் கழிவுகளை இதர வீட்டுக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வைத்து, தங்களது பகுதிகளுக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பெருமளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் குடியிருப்பு வளாகங்களின் நிர்வாகிகள், தங்களது குடியிருப்பு வளாகங்களில் உருவாகும் பட்டாசுக் கழிவுகள் அனைத்தையும் இதரக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாக ஓரிடத்தில் சேகரித்து வைத்து, மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிக்க மாநகராட்சியின் சார்பில் தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் சிறப்பு பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.