பாம்பனில் உள்ள பழைய ரயில் பாலம் (கோப்பு படம்)
ராமேசுவரம்: பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகளுக்காக பிப்ரவரி முதல் மே மாதம் வரை ரயில் பாலத்தைக் கடந்து செல்ல படகு மற்றும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பழைய ரயில் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளது. பாம்பனில் உள்ள ரயில் பாலங்களை கடந்துதான் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்குப் பகுதி துறைமுகங்களிலிருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்குப் பகுதி துறைமுகங்களிலிருந்து வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயணித்து வருகின்றன.
கப்பல்கள், படகுகள் செல்வதற்காக புதிய ரயில் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஒவ்வொரு முறை தூக்கப்படும்போதும், பழைய ரயில் தூக்குப்பாலமும் திறக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) சார்பில், பழைய பாம்பன் பாலம் நடுவில் தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ.2.53 கோடியில் அகற்ற ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது.
அதன்படி, பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து, 4 மாதங்களுக்கு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கப்பல், படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை அகற்றும் பணிக்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பாம்பனுக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.